Published : 14 May 2020 07:59 PM
Last Updated : 14 May 2020 07:59 PM
மதுரை வைகை ஆற்றின் குறுக்கே இருந்த 60 ஆண்டு பழமையான குருவிக்காரன் சாலை மேம்பாலம் நேற்று இடிக்கப்பட்டது. ரூ.23.17 கோடியில் புதிய உயர்மட்டப் பாலம் கட்டப்படுகிறது
மதுரை மாநகராட்சியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதுபோல், வாகனப் பெருக்கமும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஆனால், மக்கள்தொகை, வாகனப் பெருக்கத்திற்குத் தகுந்தவாறு விசாலமான சாலைகள், உயர்மட்டப் பாலங்கள் மதுரையில் இல்லை. அதனால், திரும்பிய பக்கமெல்லாம் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து மதுரை மாநகர் காலை முதல் இரவு அடிக்கடி ஸ்தம்பிக்கிறது.
இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமான சாலை சந்திப்புகளில் உயர் மட்டப் பாலங்கள் கட்டும் பணி தொடங்கி நடக்கிறது. அதுபோல், வைகை ஆற்றின் குறுக்கேயும் ஏற்கெனவே இருந்த தரை மட்ட பாலங்கள் இடிக்கப்பட்ட புதிய உயர்மட்டப் பாலங்கள் கட்டப்பட்டன. தற்போது வைகை ஆற்றின் குறுக்கே காமராஜர் சாலையையும், அண்ணா நகரையும் இணைக்கும் குருவிக்காரன் சாலை தரைமட்டப் பாலம் வலுவிழந்து ஆங்காங்கே பாலத்தின் கீழே உள்ள தூண்களும் விரிசல் விட்டுள்ளன.
அதனால், இந்தப் பாலத்தை இடித்துவிட்டு நகர் மற்றும் ஊரகத் திட்டத் துறையின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.23.17 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கின. நேற்று இந்த தரைமட்டப் பாலம் இடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இந்தப் பாலம் கட்டி சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் கட்டியதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஊரடங்கில் இந்த பழமையான பாலம் இடிக்கப்படுவதை, அந்த வழியாகச் சென்ற மதுரை வாசிகள் ஏகத்துடன் பார்த்து கடந்து சென்றனர். புதிய உயர்மட்டப் பாலம் 200 மீட்டர் நீளம், நடைமேடை இருபுறமும் தலா 1.50 மீட்டர் அகல நடைமேடை என பாலம் 17.50 மீட்டர் அகலத்தில் கட்டப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT