Published : 14 May 2020 07:16 PM
Last Updated : 14 May 2020 07:16 PM
"தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களையும், அலுவலர்களையும் அரசு உத்தரவை மீறிப் பணிக்கு வரச்சொல்கின்றன கல்வி நிலையங்கள். மாணவர் சேர்க்கை தொடங்கி வகுப்புகள் வரையில் எந்தப் பணியுமே நடைபெறாத நிலையில் அவர்களைப் பணிக்கு வரச்சொல்வது ஏன்?" என்று பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி அலுவலர்கள் சங்கம் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கு.தமிழரசு பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
’’பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆய்வகங்கள், இயந்திரப் பட்டறைகள், எலக்ட்ரானிக் உபகரணங்கள் மற்றும் கணிப்பொறிகள் என ஒவ்வொரு கல்லூரியிலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் இருக்கின்றன. 50 நாட்களுக்கு மேலாக அவை இயக்கப்படாமல் இருப்பதால், பழுது வரும். ஆகவே, 33 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள், அத்தியாவசியப் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதித்துள்ள விதியின்படி, 33 சதவீத பணியாளர்களைச் சுழற்சி முறையில் பணிக்கு வர அரசு அறிவுறுத்தியது.
ஆனால் இந்த உத்தரவையும், தொழில்நுட்ப இயக்குநரின் செயல்பாடுகளையும் கொச்சைப்படுத்தும் விதமாக பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி அலுவலர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. லட்சங்களைச் சம்பளமாகப் பெற்றுக்கொண்டு, கல்லூரியின் உடைமைகளைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள் கருத்து சொல்லியிருப்பது நியாயமற்றது. தங்களது அன்றாடத் தேவைகளுக்காக இந்த 50 நாட்களாக அவர்கள் வெளியே செல்லவில்லையா?
ஒவ்வொரு ஆய்வகத்திலும் ஒரு சிலரை மட்டும் சுழற்சி முறையில் பணிக்கு வரச்செய்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதால் தனிமனித இடைவெளி எந்த விதத்திலும் மீறப்படாது. எனவே, தங்கள் பொறுப்பை உணர்ந்து அரசின் அறிவிப்புக்கு அவர்கள் துணை நிற்க வேண்டும்’’.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT