Published : 14 May 2020 01:51 PM
Last Updated : 14 May 2020 01:51 PM
'பிஎம் கேர்ஸ்' நிதியிலிருந்து 3,100 கோடி ரூபாய் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இன்று (மே 14) அவர் வெளியிட்ட அறிக்கையில், "பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.3,100 கோடியை விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மிகவும் தாமதமாகச் செய்யப்பட்ட அறிவிப்புதான் எனினும் இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேரடியாக நிவாரணம் அளிக்க மேலும் நிதியை இதிலிருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
'பிஎம் கேர்ஸ்' நிதியிலிருந்து வென்டிலேட்டர் வாங்குவதற்கு 2,000 கோடி ரூபாயும், தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்காக 100 கோடி ரூபாயும், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 1,000 கோடி ரூபாயும் விடுவிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
2,000 கோடி ரூபாயில் சுமார் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வென்டிலேட்டர்களை வாங்க முடியும். இந்தியாவில் உயர்ந்து வரும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளும்போது இந்த முடிவு அவசியமானது. இதைப் பாராட்டி வரவேற்கிறோம்.
அதுபோலவே, கரோனா நோய் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதையும் வரவேற்கிறோம்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 1,000 கோடி ரூபாயும் அவர்களது பயணச்செலவு, உணவு, அவர்களை தனிமைப்படுத்தித் தங்க வைப்பதற்கான செலவு ஆகியவற்றை சமாளிக்க மாநிலங்களுக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 50 நாட்களாக வேலையும் இன்றி உணவுக்கு வழியும் இன்றி தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்பினாலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட இருப்பதால் அவர்களது குடும்பத்தில் அதே வறுமை நிலைதான் நீடிக்கும்.
எனவே, அவர்களது வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு நேரடியாக அவர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக 'பிஎம் கேர்ஸ்' நிதியிலிருந்து ஒரு தொகையை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும்" என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT