Published : 14 May 2020 01:39 PM
Last Updated : 14 May 2020 01:39 PM
பொதுமுடக்கத்தால் வீட்டுக்குள் இருந்த ஆட்டோமொபைல் பொறியாளர் ஒருவர் எவ்வித முன் அனுபவமும் இன்றி கொட்டாங்குச்சியில் கைவினைப் பொருள்களைச் செய்து அசத்தி வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் மணிக்கட்டிப்பொட்டல் அருகே உள்ள பெருங்குளத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். ஆட்டோமொபைல் பொறியாளரான இவர் ஓசூரில் பிரபல நிறுவனம் ஒன்றின் தொழிற்கூடத்தில் வேலை செய்து வந்தார். ஆனால், சுயதொழில் நாட்டத்தால் சொந்த ஊர் திரும்பிய பிரகாஷ், தனது சகோதரர் பார்த்துவரும் பஞ்சலோக விக்கிரகம் செய்யும் வேலையை அவருடன் சேர்ந்து செய்துவந்தார்.
பொதுமுடக்கத்தால் பஞ்சலோக விக்கிரகத் தொழிற்கூடமும் முடங்கிப்போனது. தொழிற்கூடம் முடங்கிய நிலையில் வீட்டிலேயே இருந்த பிரகாஷுக்கு கொட்டாங்குச்சியில் கைவினைப் பொருள்கள் செய்தால் என்ன என்ற யோசனை உதித்தது. இப்போது அதற்கு செயல்வடிவம் கொடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்.
இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் பேசிய பிரகாஷ், “நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது கண்காட்சிகளில் நானாகவே எதாவது செய்து காட்சிக்கு வைப்பேன். நான் படித்த மணிக்கட்டிப்பொட்டல் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்களும் மனம் திறந்து பாராட்டுவார்கள். அந்த ஊக்குவிப்புதான் ஏதாவது புதுமையாக செய்துகொண்டே இருக்கவேண்டும் என்னும் எண்ணத்தை எனக்கு ஊட்டிக்கொண்டே இருந்தது. பொதுமுடக்கத்தால் வேலை இல்லாமல் வீட்டில் இருந்த நான், கொட்டாங்குச்சியில் கலைப் பொருள்கள் செய்ய ஆரம்பித்தேன்.
மாட்டு வண்டி, பை, அகப்பை, கரண்டி, ஜக்கு, பிள்ளையார் சொரூபம், வாள் என இதுவரை நாற்பதுக்கும் அதிகமான கலைப் பொருள்களை செய்து முடித்திருக்கிறேன். எனது சுய ஆர்வத்தில் செய்திருக்கும் இந்தக் கொட்டாங்குச்சிக் கலை, கைவினைப்பொருள்கள் கலைப் பட்டியலில் வருகிறது. ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதைவிட கலைத்துறையில் இயங்கும்போது நமது கற்பனைத்திறனை முழுவதுமாக வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.
பொதுமுடக்கத்தில் பொழுதுபோக்காக செய்த செயல் எனக்குப் புதிய தொழில் வாய்ப்புக்கு வழிகாட்டிக் கொடுத்திருக்கிறது. கைவினைக்கலை பட்டியலில் வரும் இந்த கொட்டாங்குச்சிக் கலைக்கு வங்கிக் கடன் பெற்று அடுத்தகட்டத்துக்கு முன்னேறும் தைரியத்தை இந்தப் பொதுமுடக்கம் எனக்குத் தந்திருக்கிறது” என்று நெகிழ்ந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT