Published : 14 May 2020 10:39 AM
Last Updated : 14 May 2020 10:39 AM
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குடிசைப் பகுதிகளில் வாழும் 26 லட்சம் மக்களுக்கு 50 லட்சம் முகக்கவசங்கள் நாளை முதல் வழங்கப்பட உள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று (மே 13) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் நாள்தோறும் வழங்கப்பட்டு வரும் குடிநீர் குறித்தும், கூடுதலாக 1,000 தெருக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவது குறித்தும், நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குடிநீர் விநியோகம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் வெளியிட்ட உத்தரவுகள்:
''பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 650 குடிசைப் பகுதிகளில் சுமார் 26 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சியின் சார்பில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்து கொள்ள தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
இப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு, ஒருவருக்கு இரண்டு முகக்கவசம் என மறுபயன்பாட்டுடன் கூடிய துணியால் ஆன சுமார் 50 லட்சம் முகக்கவசங்களை நாளை முதல் வழங்க வேண்டும்.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் பொதுமக்களிடையே கரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், குறிப்பாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணியாளர்கள் தன்னார்வலர்களுடன் இணைந்து தொற்று பாதித்த பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வெளியே சென்று பணிபுரிய வேண்டியுள்ள நிலையில் வீடுகள்தோறும் சென்று பாதுகாப்புடன் பணிபுரிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், படிப்படியாக அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள், குடிநீர் பணிகள், நீராதாரப் பணிகள் மற்றும் 100 நாள் வேலைவாய்ப்புப் பணிகள் தொடங்கிட வேண்டும்.
அனைத்து அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் சூடான, விலையில்லாமல் சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
தினசரி காய்கறிச் சந்தைகளின் செயல்பாடு மற்றும் தள்ளுவண்டிகள்/ இலகுரக வாகனங்களில் தெருக்களில் சென்று காய்கறிகளைப் பொதுமக்களுக்கு இடைவெளியுடன் விற்பனை செய்வதைக் கண்காணித்தல்.
அனைத்து தூய்மைப் பணியாளர்களும் கையுறை, முகக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து செயல்படுவதை உறுதி செய்தல். தூய்மைப் பணியாளர்கள் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவ போதிய சோப்புகள் வழங்குதல் வேண்டும்.
மாநிலம் முழுவதும், கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் 3 லட்சத்து 28 ஆயிரத்து 834 களப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் பாதுகாப்புடன் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும்.
தூய்மைப் பணிகள் மேற்கொள்ள 20 ஆயிரத்து 510 கைதெளிப்பான்கள், 3,718 வாகனத்தில் பொருத்தப்பட்ட தெளிப்பான்கள், 8,191 மிஸ்ட் புளோயர்கள், 243 ஜெட்ராடிங் இயந்திரங்கள் உட்பட 420 வாகனங்கள் ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ந்து கண்காணிப்பட வேண்டும்''.
மேற்கண்ட உத்தரவுகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT