Last Updated : 13 May, 2020 10:04 PM

 

Published : 13 May 2020 10:04 PM
Last Updated : 13 May 2020 10:04 PM

10 மாதங்களுக்கு முன் பதவி உயர்வுப் பட்டியல் அறிவிக்கப்பட்டும் ஆய்வாளர் பணியை ஏற்க முடியவில்லை: தமிழகளவில் ஏக்கத்தில் எஸ்.ஐ.க்கள்

மதுரை

பதவி உயர்வுப் பட்டியல் அறிவிக்கப்பட்டு 10 மாதங்கள் ஆகியும் இன்னும் ஆய்வாளர் பணியை ஏற்க முடியவில்லையே என தமிழகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட எஸ்.ஐ.க்கள் ஏக்கத்தில் புலம்புகின்றனர்.

தமிழக காவல்துறையில் பணியில் சேரும் நிலையைப் பொருத்து குறிப்பிட்ட சில ஆண்டுக்குள் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இரண்டாம் நிலை காவலராகச் சேர்ந்தால் 25 ஆண்டில் சிறப்பு எஸ்ஐ பதவியும், நேரடி எஸ்.ஐ.யாக பணியில் சேர்வோருக்கு 10 ஆண்டில் காவல் ஆய்வாளர் பதவி உயர்வும் அளிக்கப்படுகிறது.

பணியின்போது, எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகதவர்களுக்கு மட்டுமே இந்த பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

சில நேரத்தில் நிர்வாக ரீதியாக பதவி உயர்வுக்கு ஓரிரு மாதம் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தமிழக காவல்துறையில் கடந்த 2008-ல் 700-க்கும் மேற்பட்டோர் நேரடி எஸ்ஐக்களாக பணியில் சேர்ந்தனர். இவர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் ஆய்வாளர் பதவி உயர்வு அளிக்க டிஜிபி அலுவலகம் நடவடிக்கை எடுத்தது. கடந்த 10 மாதத்திற்கு முன்பு, 311 பேருக்கு ஆய்வாளர் பதவி உயர்வுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் 128 பேருக்கு மட்டும் ஆய்வாளர் பணி வழங்கப்பட்ட நிலையில், எஞ்சிய 183 எஸ்ஐக்கள் இன்னும் ஆய்வாளர் பணி பொறுப்பேற்க முடியவில்லை.

பதவி உயர்வுக்கான காலம் கடந்து 3 ஆண்டாகவே தொடர்ந்து எஸ்ஐ-யாகவே பணிபுரிகிறோம். விரைந்து ஆய்வாளர் பணியை வழங்கவேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘ காவல்துறை நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் பதவி உயர்வு கிடைக்கவேண்டும் என்பதே எல்லோருக்கமான ஆசை. இதன்படி, எங்களுக்கு 10 ஆண்டுக்கு பின், படிநிலை (செலக்சன் கிரேடு) வழங்கினாலும், பதவி வழங்கியும் ஆய்வாளர் என்ற முத்திரையை இன்னும் வைக்க முடியவில்லை.

எங்களுடன் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற்ற 128 பேர் ரேங்க் அடிப்படையில் அவர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆய்வாளருக்கான 6 வார பயிற்சி முடித்தும் பதவியை எட்ட முடியவில்லை.

டிஎஸ்பி, ஆய்வாளர் பதவி உயர்வு அடுத்தடுத்த தாமதத்தால், எங்களுக்கும் தாமதமாகிறது என, காரணம் கூறினாலும், டிஜிபி அலுவலகம் துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும்,’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x