Published : 13 May 2020 07:41 PM
Last Updated : 13 May 2020 07:41 PM

கரோனாவால் காட்சிக்கு வராத கதம்பங்கள்: ஊட்டி மலர்க் கண்காட்சியில் ஒரு தனிமைக் கவி

மலர்க் கண்காட்சியில் கவிஞர் ம.பிரபு

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஊட்டி தாவரவியல் பூங்கா களைகட்டும். இங்கு நடக்கும் மலர்க் கண்காட்சியைக் கண்டுகளிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டிருப்பார்கள். தற்போது இங்கே ரோஜா, அல்லி, மல்லி, சாமந்தி, டேலியா என ஏராளமான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆனால், கரோனா பொதுமுடக்கம் காரணமாய், மக்கள் யாரும் வராமல் பூங்காவே வெறிச்சோடிக் கிடக்கிறது.

இந்தச் சூழலில் சிகப்பு ரோஜாக்கள் மத்தியில், தாடியுடன் ஒரு நபர் கவிதை பாடிக்கொண்டிருந்தார். அதை ஒருவர் வீடியோ படம் பிடித்துக்கொண்டிருந்தார்.

‘மலர்க் கண்காட்சிக்கு மலர்க் கூட்டமென குவிந்திருக்கும் சுவாசப் பூக்களே வாசம் வீசுங்களே... விதவையென்னும் பட்டத்தைச் சுமந்துகொண்டு வெண் சேலைதனில் காட்சியளிக்கும் மல்லிகைகளை இதய மாளிகையில் வைத்துப் பாருங்கள்… உடல் ஊனமுற்றதால் உள்ளத்தையும் ஊமையாக்கி உதிர்ந்துகொண்டிருக்கும் ஊதாப் பூக்களையும் சிறிது நேசியுங்கள்…’ என்று நீள்கிறது கவிதை.

அந்தக் கவிஞருடன் பேசினேன். பெயர் ம.பிரபு. நிறைய கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறார். ‘காட்சிக்கு வராத கதம்பங்கள்’ என்ற தலைப்பிலான இந்தக் கவிதையை கடந்த 1991-ம் ஆண்டிலிருந்து ஊட்டி மலர்க் கண்காட்சியின்போது வாசித்து, அனைவருக்கும் அதை துண்டுப் பிரசுரமாக்கி அளிப்பது இவரது வழக்கம். கடந்த வருடம் மட்டும் அப்படி 10 ஆயிரம் துண்டுப் பிரசுரங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்டதாம். இந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக இவர் துண்டுப் பிரசுரம் அச்சடிக்கவில்லை. ஆனால், மலர்களின் முன் நின்று கவிதை பாடாமல் இருக்க இவரால் முடியவில்லை.

“மலர்க் கண்காட்சியின்போது இந்தத் தாவரவியல் பூங்காவிற்கு வரும்போதெல்லாம், எனக்குள்ளே கற்பனை சிறகடிக்கும். கைம்பெண் கோலம் பூண்ட பெண்களை, மாற்றுத்திறனாளிகளை எல்லாம் மலர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பேன். பல மலர்கள் யாராலும் ரசிக்கப்படாமல் சருகாவதை எண்ணியெண்ணி மனம் துன்பப்படும். அதையே இங்கு வருபவர்களுக்குக் கவிதையாக வடித்துக் கொடுத்தால் என்ன, அதன் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே என்று தோன்றியது.

இணைப்பில் சென்ற ஆண்டு அச்சிட்ட கவிதைப் பிரசுரம்,

அப்படித்தான் 1991-ல் இந்தக் கவிதையை எழுதி இங்கேயே நின்று வாசித்தேன். நண்பர்கள் பலரும் உற்சாகமூட்டும் விதமாக, இந்தக் கவிதையைத் துண்டுப் பிரசுரமாக அச்சடித்து, வருவோர் கைகளில் எல்லாம் கொடுத்தார்கள். வரதட்சணைக் கொடுமை, பெண்கள் மீதான வன்கொடுமை, விதவைக் கோலம் போன்றவற்றை அகற்றும் விதமான வாசகங்கள் இடம் பெற்ற இந்த கவிதையின் கடைசி வரியில், ‘இந்தக் காகிதத்தை வீதியில் விட்டுச்செல்லுங்கள். பரவாயில்லை. இதன் அர்த்தங்களை மட்டும் கொஞ்சம் தொட்டுச்செல்லுங்கள்’ என்று முடித்திருந்தேன்.

என்ன ஆச்சரியம். துண்டுப் பிரசுரங்கள் ஒன்றுகூட மறுநாள் இங்கே கீழே கிடக்கவில்லை. அந்த அளவு கவிதைப் பக்கத்தை அவர்கள் எல்லாம் பத்திரப்படுத்திச் சென்றுள்ளார்கள் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். அடுத்த வருடம், அதற்கு அடுத்த வருடம் என மலர்க் கண்காட்சியின்போது கவிதையை அச்சடித்துக் கொடுப்பதும், நான் இங்கே நண்பர்கள் மத்தியில் நின்று கவிதை வாசிப்பதும் தொடர்ந்தன. 28 வருடங்களில் எப்படியும் இந்தக் கவிதையை மட்டும் 2.50 லட்சம் துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்துக் கொடுத்திருப்போம். அது எல்லாம் நண்பர்கள் உதவியுடன் தவறாமல் நிகழ்ந்த நிகழ்வுகள்.

இந்த வருடம் மட்டும்தான் கரோனா பொதுமுடக்கத்தால் அதைச் செய்ய முடியவில்லை. அதனால் என்ன, இங்கிருக்கும் மலர்களிடம் என் கவிதையைச் சொல்லலாம் அல்லவா… நம் மனிதர்களின் நடுவே உள்ள மலர்களின் துயரை. அப்படித்தான் இன்றும் இங்கே கவிதை பாடினேன்” என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் ம.பிரபு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x