Published : 13 May 2020 06:04 PM
Last Updated : 13 May 2020 06:04 PM
தமிழகத்தில் கரோனா களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரைச் சொக்கிகுளத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள், ஊடக பணியாளர்கள், வருவாய் அலுவலர்கள், அரசு மற்றும் அரசு சாராத தன்னார்வலர்கள் என பலர் களப்பணியாற்றி வருகின்றனர்.
களப்பணியாளர்கள் பலருக்கு கரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், அம்மா உணவகத்தில் பணியாற்றும் பணியாளர்கள், ஊடக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் பொதுநலத்துடன் பணியாற்றி வருகின்றனர். நெருக்கடியான தற்போதைய கால கட்டத்தில் களப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
எனவே, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள், ஊடகப் பணியாளர்கள், வருவாய் அலுவலர்கள், அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு கவச ஆடைகள், முகக் கவசங்கள், கையுறைகள், ரப்பர் காலணிகள் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் வீடியோ கான்பரன்ஸ் வசதியில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹென்றி திபேன், சென்னையில் காவல் உயர் அதிகாரி, துப்பரவு பணியாளர்கள், ஊடக பணியாளர்கள் உட்பட 21 களப்பணியாளர்களுக்கு கரேனாா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே களப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். இதனை சட்டப்பணிகள் ஆணைக்குழு கண்காணிக்க வேண்டும் என்றார்.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், இதேபோல் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு மே 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், கரோனா பரவல் தடுப்பு பணியில் முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாநில பேரிடர் மேலாண்மை துறையின் முதன்மைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மே 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT