Published : 13 May 2020 06:16 PM
Last Updated : 13 May 2020 06:16 PM

கரோனா தன்னார்வலர்களுக்கு நளபாகம்: 42 நாட்கள் தொடர் சமையல் சேவை புரிந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்

“வெங்காயத்தைப் பெருசா நறுக்கு... இஞ்சி, பூண்டு கூட கிராம்பு, பட்டை எல்லாம் சேர்த்து மைய அரைச்சிடு…”- நெற்றியில் திருநீற்றுப் பட்டை. கூடவே சந்தனம் குங்குமம். படபடக்கும் குரலில் சமையல்காரராகத் தன் உதவியாளர்களை ஏவியபடி இருந்த ‘செல்லா’ என்கிற செல்லக்குமார், ஊட்டியில் அரசுப் பேருந்து ஓட்டுநர். காந்தல் பகுதியில் கரோனா தன்னார்வலர்களுக்கு 42 நாட்களாகச் சமையல் சேவை செய்து அசத்தியிருக்கிறார் இவர்.

30 ஆயிரம் பேர் வசிக்கும் காந்தலில், கடந்த மாதம் 9 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 3 கிலோ மீட்டர் சுற்றுப்பகுதி சிவப்பு மண்டலத்துக்குள் கொண்டுவரப்பட்டது. மக்கள் தெருவை விட்டு வெளியில் வர முடியாத சூழல். அவர்களுக்குத் தேவைப்படும் காய்கனி, மளிகை உணவு, மருந்து, பால் பொருட்களை வாங்கிக் கொடுக்க 45 தன்னார்வலர்கள் புறப்பட்டார்கள். அவர்களுக்குக் காலை, மதியம், மாலை உணவு சமைக்கும் பணிகளைச் செய்தவர் செல்லக்குமார். அவரிடம் பேசினேன்.

காந்தல்ல எப்போ இந்த சமையல் வேலைய ஆரம்பிச்சீங்க?
ஏப்ரல் 2-ம் தேதி ஆரம்பிச்சோம். 42 நாள் இப்படியே ஓடியிருக்கு. காலையில கிச்சடி, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம். இதுக்கு எப்படியும் நாலஞ்சு கிலோ அரிசி போடுவேன். மதிய சாப்பாட்டுக்கு 8 கிலோ அரிசி. குழம்பு, ரசம். கூட்டுப் பொரியல். மதிய சாப்பாட்டுக்கு 50, 55 பேர் ஆயிடுவாங்க. காலையிலயிருந்து பொழுது வரைக்கும் வேற யாரையும் சமைக்க விடமாட்டோம். எல்லா வேலையும் இந்த 45 பேர்தான். அதனால யாருக்கும் கரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு உருவாகலை.

ஏற்கெனவே சமையல் வேலை செஞ்சிருக்கீங்களா?
சின்ன வயசுலயிருந்து சமையல்ல ரொம்ப ஆர்வம். வீட்ல விருந்தினர்கள் வந்துட்டா, ஸ்பெஷல் அயிட்டம் எல்லாம் நான்தான் சமைப்பேன். சொந்தக்காரங்க வீட்ல விசேஷம்னாலும் சமையல்கட்டுலதான் என் வாசம். மாரியாத்தா கோயில் விசேஷத்துல சமைச்சிருக்கேன். 200 பேர் வரைக்கும் சமைச்சுப் போட்டிருக்கேன். யாருகிட்டவும் பைசா வாங்கிக்க மாட்டேன்.

இங்கே சமையல்காரரா மாறுனது எப்படி?
இதே காந்தல்லதான் என் வீடும் இருக்கு. ஜனங்க கஷ்டப்படறதைப் பார்த்தவுடனே தன்னார்வலர்களோட நானும் சேர்ந்துட்டேன். எல்லாரும் ஆளுக்கு ஒரு வேலை பார்த்தாங்க. நம்ம என்ன செய்யறதுன்னு பார்த்தேன். இப்படி உழைக்கிற தன்னார்வலர்களுக்குச் சமைச்சுப்போடறதே நம் பாக்கியம்னு இறங்கிட்டேன். ரெண்டு மூணு நண்பர்களைச் சேர்த்துட்டேன். ஒருத்தர் இங்கிருந்து சமையல் கான்ட்ராக்ட் எடுத்து வெளியே உணவு சப்ளை செஞ்சவர். இன்னொருத்தர் சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடறவர். விஷயத்தைச் சொல்லி அவங்ககிட்ட பாத்திரங்கள் கேட்டோம். உடனே ஸ்பான்சர் கொடுத்துட்டாங்க. கேஸ் அடிஷனல் சிலிண்டர் என் நண்பர் கொடுத்தார். அதை மாத்தி எடுத்துட்டோம். என் நண்பர் வீடு ஒண்ணு காலியாக் கிடந்தது. சமையல் செய்யக் கேட்டதும் கொடுத்துட்டார்.

சாப்பாட்டுக்கான செலவுகளை எப்படி சமாளிக்கிறீங்க?
ஒரு நாள் மட்டும்தான் சொந்த செலவுல பொருள் வாங்கிச் சமைச்சோம். அதைப் பார்த்துட்டு ஊருக்குள்ளேயே சில பேர் ஒவ்வொரு நாள் செலவை (தினம் சுமார் ரூ.3500) ஒவ்வொருத்தர் ஏத்துக்கிட்டாங்க. ஒரு ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியாளர் ஒருத்தர் 8 கிலோ சிக்கன் வாங்கிக் கொடுத்தார். அதைப் பார்த்து அடுத்தடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆளாளுக்கு சிக்கன் வாங்கித் தர ஆரம்பிச்சுட்டாங்க. இந்தச் செய்தி தெரிஞ்சு திருப்பூர்ல இருக்கும் என் உறவினர் ஒருவர் என் அக்கவுன்ட்ல ரூ.3,000 போட்டுவிட்டார்.

42 நாள் தொடர்ச்சியா 50 பேருக்கு மூணு வேளையும் சமைச்சிருக்கீங்க… சோர்வு தட்டலையா?
எதுக்கு சோர்வு வருது? நமக்குப் பிடிச்ச வேலை. மக்கள் கஷ்டப்படறபோது செய்றோம். இது மாதிரி நிறைவு, வேற ஏதாவதுல கிடைக்குமா? இப்ப இந்தப் பகுதிக்கு குவாரன்டைன் பீரியடு முடியுது. அவங்கவங்க அவங்கவங்க வேலைய கவனிக்கப் போயிருவோம். அதை நினைக்கும்போதே ஏதோ இழந்த மாதிரி ஃபீலிங் வருது.

பஸ் டிரைவர் பணியையும், சமையல் சேவையையும் எப்படிப் பார்க்கறீங்க?
அது சம்பளம் வாங்கிட்டுச் செய்றோம். இதைச் சம்பளம் வாங்காம செய்றோம். ஆனா, ரெண்டுமே மக்களுக்கான பணி. உயிர்ப் பாதுகாப்புக்கான பணி. இன்னும் சொல்லப்போனா இந்தப் பணியைக் கூட நான் சம்பளம் வாங்காம செஞ்சேன்னு சொல்ல முடியாது. ஏன்னா, இந்த மாசம் பஸ் ஓட்டாமலே ஆபீஸ்ல எனக்கு சம்பளம் போட்டுட்டாங்க!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x