Last Updated : 13 May, 2020 05:28 PM

 

Published : 13 May 2020 05:28 PM
Last Updated : 13 May 2020 05:28 PM

ஆசியாவிலேயே முதல் முறையாக 8 மணிநேர வேலை அமலான புதுச்சேரியில் வேலை நேரம் அதிகரிப்பு: கடும் எதிர்ப்பைச் சந்திக்கும் காங்கிரஸ் அரசு

முதல்வர் நாராயணசாமி: கோப்புப்படம்

புதுச்சேரி

ஆசியாவிலேயே முதல் முறையாக 8 மணி நேரம் வேலை அமலான புதுச்சேரியில் வேலைநேரம் 8 மணி நேரத்துக்குப் பதிலாக 12 மணி நேரம் என்று விதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

புதுச்சேரியில் அடுத்த மூன்று மாதத்துக்கான தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்திக் கொள்ள மாநில தொழிலாளர் துறை அனுமதி தந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆசிய நாடுகளிலேயே 8 மணி நேர வேலை என்பது புதுச்சேரியில்தான் முதன்முதலில் அமலாக்கப்பட்டது. அதற்கு நீண்ட வரலாறு உள்ள சூழலில் தற்போது காங்கிரஸ் அரசில் மாற்றப்பட்டுள்ளதை[ப் பலரும் சுட்டிக்காட்டி வேதனை தெரிவிக்கின்றனர்.

முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன், இது தொடர்பாக முதல்வர், தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில், "கட்சித் தலைவர் ராகுல் காந்தி நமது நாட்டில் பல மாநிலங்களில் தொழிலாளர் நலச் சட்டங்கள் விதிகளைத் தளர்த்தி தொழிலாளர்கள் பல ஆண்டுகாலமாக பெற்று இருந்த பல சலுகைகளை, உரிமைகளைப் பறிக்கும் விதமாக சட்டத் திருத்தம் செய்வதை கடுமையாக எதிர்த்திருக்கிறார்.

இந்நிலையில், நமது மாநிலத்தில் காங்கிரஸ் அரசு தொழிலாளர் வேலை நேரம் அதிகரிப்பு, அதற்கு கொடுக்கப்பட வேண்டிய இரட்டிப்பு ஊதியம் போன்றவற்றுக்கு விதிகளைத் தளர்வு செய்திருப்பது சட்ட விரோதம் மட்டுமல்ல. தொழிலாளர் விரோதமான செயலும் ஆகும்.

கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தொழிற்சாலை அதிபர்கள் மட்டுமல்ல. உண்மையாக உணவுக்கும், அடிப்படைத் தேவைக்கும் அல்லல்படுவது தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள்தான்.

அவர்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் கரோனா ஊரடங்கு காலத்தில் ஊதியம் வழங்க வேண்டும், யாரையும் வேலையை விட்டு நீக்கக் கூடாது போன்ற அறிவிப்புகள் வெறும் அறிக்கைகளாகவே இருக்கிறது. ஆனால், இதற்கு மட்டும் விதிகளை தளர்த்தியிருப்பது வேதனையாக உள்ளது.

கட்சித் தலைவர் பேச்சுக்கு மாறாக அரசு நடப்பது பொதுமக்களிடத்திலும், மற்ற கட்சிகளிடத்திலும் கடுமையான விமர்சனத்தை உண்டாக்குகிறது. எனவே தயவுசெய்து மறுபரிசீலனை செய்யுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் கூறுகையில், "நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கை சாக்காக வைத்து உற்பத்தி பெருக்கம் என்ற பெயரில் வேலை நேரத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு வெள்ளோட்டமாக பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்களை முடக்கியுள்ளது.

ஆனால், பாஜக அல்லாத ஆட்சி இருக்கக்கூடிய புதுச்சேரியில், ஆசிய கண்டத்திலேயே 8 மணி நேர வேலை உரிமையை உயிர் தியாகத்தின் மூலம் பெற்ற புதுச்சேரி மண்ணில் வேலை நேர அதிகரிப்பை ஏற்க முடியாது. தொழிலாளர் விரோத மத்திய பாஜக அரசின் அடியொற்றியே புதுச்சேரி அரசு செயல்படுகிறது. இது காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலோடு செயல்படுத்தப்படுகிறதா? என்பதை ஆட்சியாளர்கள் தெரியப்படுத்த வேண்டும்.

வேலை நேர அதிகரிப்பு என்பது தொழிலாளர்களைச் சுரண்டுவது மட்டுமல்ல, ஆட்குறைப்புக்கும் வழிவகுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

சிஐடியூ செயலர் சீனுவாசன் கூறுகையில், "புதுச்சேரியில் 12 உயிர்களைத் தியாகம் செய்து 8 மணி நேரம் வேலை உரிமையைப் பெற்றோம். தற்போது தொழிலாளர் சட்டங்களை சுருக்குவது, மூன்றாண்டுகளுக்கு நிறுத்தி வைப்பது, 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணிநேரமாக்குவது, தொழிற்சாலை சட்டங்களை நீக்குவது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன,

புதுச்சேரியில் நடைபெறும் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு ராகுல் காந்தி அறிவிப்புக்கு மாறாக எட்டு மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில்தான் ஆசியத் துணைக் கண்டத்திலேயே 8 மணி நேர வேலை உரிமைக்கான தொழிலாளர் வர்க்கம் 1936-ம் ஆண்டு பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி ஜூலை 30-ம் நாள் 12 தோழர்கள் துப்பாக்கி சூட்டுக்குப் பலியாகி ரத்தம் சிந்திய மண் இந்த மண்.

இந்த தியாக பூமியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான நாராயணசாமி அரசு, தொழிலாளர்களின் உயிர்த் தியாகங்களுக்கு மதிப்பளிக்காமல் 8 மணி நேர நேரத்தை 12 மணி நேரமாக மாற்றி அறிவித்திருப்பது புதுச்சேரி தொழிலாளி வர்க்கத்திற்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இதனைத் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு இழைத்திட்ட துரோகமாக சிஐடியு பார்க்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவர் எம்எல்ஏ அன்பழகன் கூறுகையில், "உற்பத்தியைப் பெருக்க தொழிற்சாலைகளில் தேவையான தொழிலாளர்களை நியமனம் செய்து ஷிப்ட் முறையில் தொழிற்சாலைகள் இயங்கும் நேரத்தை அதிகரிக்கலாம். அதைவிடுத்து தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 8 மணிநேர வேலை என்ற உரிமையை ஆளும் காங்கிரஸ் அரசு நசுக்கியுள்ளது.

திமுக துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசு தொழிலாளர் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தொழிலதிபர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்திருப்பது கண்டிக்கதக்க ஒன்றாகும். ஒருபுறம் காங். தலைவர் ராகுல் காந்தி 12 மணிநேர வேலையை எதிர்த்து குரல் கொடுக்கிறார். ஆனால், அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் நாராயணசாமி தலைமையிலான இந்த அரசு 12 மணிநேர வேலையை புதுச்சேரி மாநிலத்தில் தொழிலதிபர்களுக்கு சாதகமாக அமல்படுத்தி இருப்பது என்பது காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.

வறுமையைப் பயன்படுத்தி அவர்களின் உடல் உழைப்பை சுரண்டும் இந்த 12 மணிநேர வேலை அறிவிப்பை புதுச்சேரி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x