

கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்த கடைசி நோயாளியும் இன்று வீடு திரும்பியதால், தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் இருந்து கோவை திரும்பிய பெண்ணுக்கு கடந்த மார்ச் 22-ம் தேதி கரோனோ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கோவையில் உறுதி செய்யப்பட்ட முதல் தொற்று இதுவாகும். கடைசியாக கடந்த 4-ம் தேதி கர்ப்பிணி ஒருவர் கரோனா பாதிப்புக்காக கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, கடந்த 9 நாட்களாகப் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. கோவையில் மொத்தம் 146 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் சிகிச்சை பெற்ற ஒருவர் மட்டும் உயிரிழந்தார். 144 பேர் வீடு திரும்பினர். கடைசியாக சிகிச்சை பெற்று வந்த பெண்ணும், அவரது பச்சிளங் குழந்தையும் இன்று (மே 13) வீடு திரும்பினர். இதனால், கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறியுள்ளது.
இது தொடர்பாக கரோனா தொற்று சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டுவரும் கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் ஏ.நிர்மலா கூறியதாவது:
"குறைந்தபட்சமாக பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையும், அதிகபட்சமாக 87 வயது மூதாட்டியும் இங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்றவர்களில் 70 சதவீதம் பேர் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தனர். 30 சதவீதம் பேருக்குதான் காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தன. நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி, அவர்களுக்கேற்ற மாத்திரைகள், உணவுகளை வழங்கினோம்.
மனதளவில் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க உளவியல் நிபுணர்களைக் கொண்டு ஆலோசனைகள் அளித்தோம். இதுவரை யாருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தேவைப்படவில்லை. அதேபோல வென்டிலேட்டரும் தேவைப்படவில்லை.
வீடு திரும்பியவர்களில் ஒரே ஒருவர் மட்டுமே காய்ச்சல் அறிகுறிகளுடன் 5 நாட்கள் கழித்து அனுமதிக்கப்பட்டார். மீண்டும் அவருக்கு அனைத்துப் பரிசோதனைகளையும் மேற்கொண்டதில் அவருக்கு 'நெகட்டிவ்’ என முடிவு வந்தது. ஒரே நாளில் காய்ச்சலும் குணமாகிவிட்டது. பின்னர், அவர் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அதிக நோயாளிகள் விரைவாக சிகிச்சை முடிந்து வீடு திரும்ப மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்ட அனைவரின் கூட்டு முயற்சியே முக்கிய காரணம்"
இவ்வாறு டீன் நிர்மலா கூறினார்.