Published : 13 May 2020 03:40 PM
Last Updated : 13 May 2020 03:40 PM
தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 30 மாநிலங்களைச் சேர்ந்த 3,171 பேர் சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் இன்று (மே 13) கரோனா தடுப்புப்பணிகள் மற்றும் குடிமராமத்துப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:
"தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பீகாரைச் சேர்ந்த 1,126 பேரும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 406 பேரும், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 339 பேரும், ஜார்க்கண்டைச் சேர்ந்த 226 பேரும் என 30 மாநிலங்களைச் சேர்ந்த 3,171 பேர் அவர்களது சொந்த மாநிலத்துக்கு செல்ல விருப்பம் தெரிவித்து இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
இவர்களில் தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்வு கொடுத்துள்ள காரணத்தினால், பணிபுரிய விருப்பமுள்ளவர்களின் விவரங்களைப் பெற்று, மீதமுள்ளவர்களுக்கு அவரவர் சொந்த மாநிலம் செல்ல வேண்டிய முன்னேற்பாடு பணிகளை தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தற்போது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்குள் வரும் நபர்கள் மாவட்டத்தின் 8 சோதனைச்சாவடிகளிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, அவர்கள் குறித்த விவரங்களைப் பெற்று, அவர்கள் வந்திருக்கும் அப்பகுதியை பொருத்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதி அல்லது கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து வந்திருந்தால், அவர்களுக்கு பரிசோதனை செய்து, அதன் முடிவு வரும் வரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தங்க வைக்க வேண்டும்.
புதிய முறை
தற்போது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்பது கரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டினை மையமாக வைத்து, 5 கிலோமீட்டர் சுற்றளவில் கணக்கிடப்படுகிறது.
தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் சிரமங்களை குறைக்க, பாதிக்கப்பட்டவரின் தெரு மற்றும் தொடர்புடைய தெருக்களை மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக கணக்கிடவும், 28 நாட்கள் முடிவுற்று புதிய தொற்றுகள் ஏற்படாமலிருந்தால், அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து விடுவிக்கவும் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளலாம்.
நடப்பாண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 107 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பணிகளுக்குரிய பாசனதாரர்கள் சங்கம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளையும், சங்கங்களை பதிவு செய்து, வரும் வாரங்களுக்குள் பணிகளை தொடங்கிட தேவையான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்"
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் க்ளாஸ்டன் புஷ்பராஜ், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் உமாமகேஸ்வரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ச.மருததுரை, முன்னாள் முதல்வர் குமுதாலிங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT