Published : 13 May 2020 01:10 PM
Last Updated : 13 May 2020 01:10 PM
நாட்டிலேயே மிக மிக மோசமாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகாராஷ்டிரா. அம்மாநிலத்தில் இதுவரை 24,427 பேர் பாதிக்கப்பட்டு, 921 பேர் உயிரிழந்துள்ளனர். 'குட்டி தமிழ்நாடு' என்று அழைக்கப்படும் தாராவியில் மட்டும் இதுவரையில் 962 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத. 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பையில் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன என்றாலும் தாராவியில் வசிப்பவர்கள் யாரும் வேலைக்கு வரக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டதால் அந்த மக்கள் வருமானமும் இல்லாமல், வாழவும் முடியாமல் அவதிப்படுகிறார்கள். நோயில் இருந்தும், வறுமையில் இருந்தும் தற்காத்துக்கொள்ள லட்சக்கணக்கான தமிழர்கள் தமிழகம் திரும்ப விரும்புகிறார்கள். தங்களை தமிழ்நாட்டுக்கு அழைத்துச் செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். சிலர் அரசை எதிர்பார்க்காமல், மிக மிக அதிக வாடகை கொடுத்து கார் உள்ளிட்ட வாகனங்களில் தமிழகம் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
இதுகுறித்து மும்பையில் செயல்படும் ‘விழித்தெழு இயக்க’ ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தமிழனிடம் கேட்டபோது, "தாராவி தமிழர்களை மீட்கக்கோரி ஒரு மாதத்துக்கு முன்பே, தமிழ்நாட்டின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிக்கு மின்னஞ்சல் வாயிலாகவும், வாட்ஸ் அப் வாயிலாகவும் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், இதுவரையில் எந்தப் பதிலும் இல்லை. மும்பை மாநகராட்சி, சுகாதாரத்துறை அதிகாரிகள்கூட எங்களுக்குப் பதில் தருகிறார்கள். ஆனால், தமிழ்நாடு முற்றாகக் கைவிட்டுவிட்டது.
மகாராஷ்டிராவில் உள்ள தமிழர்களை மீட்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தன்னார்வலர் ஒருவர் தொடர்ந்த வழக்கிலும்கூட, பிற மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையைத்தான் தமிழக அரசு சொல்லியிருக்கிறதே தவிர, மும்பைத் தமிழர்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. உ.பி. உள்ளிட்ட வடமாநிலங்கள்கூட தங்கள் மாநிலத் தொழிலாளர்களுக்காக, சிறப்பு ரயில் விட வைத்து அவர்களை மீட்டுள்ளன. ஆனால், தாராவி தமிழர்களின் நிலை பரிதாபமாய் இருக்கிறது.
அரசுகள் கண்டுகொள்ளாததால் இனியும் இங்கிருந்தால் தாக்குப்பிடிக்க முடியாது என்று பலர் மிக மிக அதிக வாடகைக்கு கார், வேன் பிடித்துத் தமிழ்நாட்டுக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள். எங்கள் அமைப்பு சார்பிலும் பேருந்து ஏற்பாடு செய்து இதுவரையில் 420 பேரை தமிழ்நாட்டிற்கு அனுப்பியிருக்கிறோம். ஆனால், ஒரே ஒரு நபரைக்கூட தமிழ்நாடு அரசு அழைத்துக்கொள்ளவில்லை.
மும்பையில் ஆங்காங்கே தவிக்கும் தமிழர்களை எல்லாம் தொடர்புகொண்டு, ஊர் திரும்புவதற்காக அவர்களின் பெயர்களைப் பதிவு செய்ய முயன்று கொண்டிருக்கிறோம். ஒரு பகுதியில் கான்ட்ராக்டர்களால் கைவிடப்பட்ட 500 தமிழர்களைக் கண்டறிந்தோம். அவர்களுக்கு மும்பை மாநகராட்சி சார்பில் தினமும் ஒருவேளை உணவு மட்டும் வழங்கப்படுகிறது. அதுவும் பச்சரிசி உணவு என்பதால் பலருக்கு வயிற்றுப் பிரச்சினை வந்துவிட்டது.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் மட்டும்தான் இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். இத்தனைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிற அதிமுக தொடங்கி நாம் தமிழர் வரையில் அத்தனை கட்சிகளுக்கும் இங்கே கிளை அமைப்புகள் இருக்கின்றன. திமுகவும்கூட அறிக்கைதான் விட்டிருக்கிறார்களே தவிர, தமிழ்நாட்டில் உதவுவதைப் போல இங்கே தங்கள் கட்சியினரைக் கொண்டு நேரடியான நிவாரணப் பணியில் ஈடுபடவில்லை.
விழித்தெழு இயக்கம் சார்பில் பசியால் வாடும் தொழிலாளர்களை அடையாளம் கண்டு, பட்டியல் கொடுக்கிறோம். லெமூரியா அறக்கட்டளை தலைவர் குமணராசன் உள்ளிட்டோர் அவர்களுக்கு உணவும், சமையலுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வழங்குகிறார்கள். இதற்கு மேலும் தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசு தாமதிப்பது, பச்சைப் படுகொலைக்குச் சமமானது” என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT