Published : 13 May 2020 12:08 PM
Last Updated : 13 May 2020 12:08 PM
விழுப்புரம் சிறுமி அதிமுக நிர்வாகிகளால் தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு இன்று (புதன்கிழமை) மதுரை உயர் நீதிமன்றக் கிளை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று மதுவிலக்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் மதுரை வழக்கறிஞர் நந்தினி அறிவித்திருந்தார். இதையடுத்து இன்று அதிகாலையிலேயே அவரது வீட்டின் முன்பு போலீஸார் குவிக்கப்பட்னர்.
வீட்டைவிட்டு வெளியே வந்தால், கைது செய்வோம் என்று போலீஸார் எச்சரித்திருந்தனர். ஆனாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று நந்தினியும் அவரது தந்தை ஆனந்தனும் கூறியதால், காலை 10 மணி அளவில் இருவரும் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். செல்லும் வழியில் கோஷமிட்டபடியே அவர்கள் நடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் காவலுக்குச் செல்லும் வழியில் நம்மிடம் பேசிய நந்தினியின் தந்தை ஆனந்தன், "விழுப்புரம் சிறுமியைக் குடிபோதையில் கொடூரமாக எரித்துக் கொன்ற அதிமுக நிர்வாகிகள் முருகன், கலியபெருமாள் ஆகியோருக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க வேண்டும். டாஸ்மாக்கை மீண்டும் திறந்து இதுபோன்ற கொலை, குற்றங்கள் செய்ய மக்களை அரசே தூண்டக்கூடாது.
ஆன்லைன் விற்பனை என்ற பெயரில் வீட்டுக்கே சென்று மதுவை சப்ளை செய்யும் திட்டத்தைக் கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை அறிவித்திருந்தோம். உடனே போலீஸார் எங்களைக் கைது செய்துவிட்டார்கள்.
இதுவரையில் சுமார் 100 முறை கைதாகியிருக்கிறோம். அதற்காகப் பின்வாங்க மாட்டோம். தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்" என்றார் .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT