Published : 13 May 2020 10:49 AM
Last Updated : 13 May 2020 10:49 AM
கரோனா தாக்கம் படிப்படியாக உயர்ந்து பின்னர் தான் குறையும் என வல்லுநர்கள் கூறியுள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 13) வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பேசியதாவது:
"மத்திய, மாநில அரசுகள் கூறும் வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர்கள் மிகச்சிறப்பான முறையில் கடைபிடித்து வருகின்றீர்கள். கரோனா வைரஸ் நோயை பொறுத்தவரையில் சிறிய அளவில் பரவி, பின்னர் பெரியளவில் உயர்ந்து பின்னர்தான் படிப்படியாக குறையும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அப்படித்தான் பல்வேறு நாடுகளில் நடந்திருக்கின்றன. வெளிநாடுகளில் இந்நோய்த்தொற்று சிறிய அளவில் ஏற்பட்டு பின்னர் படிப்படியாக உயர்ந்து, அதன்பின்னர் தான் குறைந்துள்ளது. அதேபோல் தான் தமிழகம், இந்தியாவில் நிலைமை இருக்கிறது.
உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத்துறை, தமிழக வல்லுநர்கள் குழு கூறும் வழிமுறைகளை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் நோய்த்தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடிந்தது. கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு மிக எளிதில் பரவுகிறது.
அரசு கூறுவதை மக்கள் பின்பற்றினால் தான் நோய்த்தொற்றைத் தடுக்க முடியும். பொதுமக்கள் ஒத்துழைப்பில்லாமல் தொற்றுப் பரவலைத் தடுப்பது சுலபமல்ல. மக்களுக்குத் தொடர்ந்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. நோய்ப்பரவலைத் தடுப்பது மக்களின் கைகளில் தான் உள்ளது.
மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்துள்ளது. மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி சிரமமின்றி எளிதாக கிடைக்கின்றன. வெளிமாநிலத்தில் இருந்து மளிகை பொருட்கள் நம் மாநிலத்தில் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து நேரடியாக காய்கறிகள் உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்பட்டு, நடமாடும் வாகனங்கள் மூலம் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு மாவட்ட ஆட்சியர்கள் உட்பட அனைத்துத் துறை அதிகாரிகளும் துணை நின்றனர். அதனால் தான் மக்களுக்கு சிரமமின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைத்துள்ளன.
அதேபோன்று, ஏழை, எளிய மக்களுக்கும் ரேஷன் கடை மூலம் ரூ.1,000 வழங்கப்பட்டது. விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் வழங்கப்பட்டது. ஏப்ரல் மாதத்திற்கு வழங்கப்பட்டது. மே மாதத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்திற்கும் இவை இலவசமாக வழங்கப்படும். 4 பேர் உள்ள குடும்பத்திற்கு 50 கிலோ அரிசி வழங்கப்படும். மற்ற பொருட்கள் 1 கிலோ வழங்கப்படும். பல மணிநேரம் ரேஷன் கடைகளில் நிற்க தேவையில்லை. தங்கு தடையின்றி அவை வழங்கப்படும். தமிழகத்தில் பசி, பஞ்சம் என்பது இல்லை.
அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு 2-வது முறையாக ரூ.1,000 வழங்கப்படும். வெளிமாநில தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
அம்மா உனவகங்கள் மூலமாக ஒரு நாளைக்கு 7 லட்சம் பேருக்கும் 'சமூக கிச்சன்' மூலமாக நாள்தோறும் 2 லட்சம் பேருக்கு உனவு வழங்கப்பட்டன.
வேளாண் பணிகளுக்கு எந்த விதிகளும் இல்லை. அதனால் அப்பணிகள் தொய்வின்றி நடக்கின்றன. 100 நாள் வேலைத்திட்டம் 3-ல் ஒரு பங்கு பணியாளர்கள் மூலம் நடத்தப்படுகிறது. நகரப்பகுதிகளைத் தவிர்த்து ஊரகப்பகுதிகளில் தொழிற்சாலைகள் இயக்கப்பட்டு வருகின்றன. உணவு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள், சிறு, குறு, தொழில்கள் உள்ளிட்டவை ஊரகப்பகுதிகளில் நடக்கின்றன. சாம்பிள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லாமல் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர்கள் வேகமாக செயல்பட்டதே காரணம். பொதுமக்கள் ஒத்துழைப்புக்கு ஏற்ப படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படும். சில விதிமுறைகளை பின்பற்றி பல்வேறு கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
தொழில்கள், பொருளாதாரத்தை மீட்டெடுக்க உயர்மட்ட குழுவை அரசு அமைத்துள்ளது. நோய்ப்பரவலின் காரணமாக வெளிநாட்டில் இயங்கும் தொழில் நிறுவனங்கள் வேறு நாட்டுக்குச் செல்கின்றன. அந்த தொழில்களை நம் மாநிலத்திற்குக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், தலைமை செயலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அனைத்து துறை அதிகாரிகள், பணியாளர்களும் ஒருங்கினைந்து செயல்பட்டதால் நோய்பரவல் தடுப்பில் வெற்றி கண்டிருக்கிறோம்.
நோய் ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக சொல்கின்றனர். அதிகமாக பரிசோதனை செய்வதாலேயே அதிகமான எண்ணிக்கை இருக்கிறது. அதிகமாக பரிசோதித்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இறப்பு சதவீதம் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடுதான்.
சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 0.67% தான் இறப்பு விகிதம். 27% பேர் குணமடைந்திருக்கின்றனர். 53 பரிசோதனை மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் தான் இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனை மையங்கள் உள்ளன. மற்ற மாநிலங்கள் இவ்வளவு பரிசோதனை செய்யவில்லை. அதனால் நோய்த்தாக்கம் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமாகி வீடு திரும்புவார்கள். இந்நோய்த்தொற்று சற்று ஏறித்தான் இறங்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு துணை நிற்கும்.
குடிமராமத்து திட்டங்களும் விரைந்து செயல்படுத்தப்படும், கடந்த காலங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தியதால் தான் மழைநீரை சேமித்து பயன்படுத்த முடிகிறது. டெல்டா பகுதிகளில் உள்ள பாசன கால்வாய்களும் தூர்வாரப்படும்.
பிரதமர் நேற்று உரையாற்றினார். பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 20 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார்h"
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT