Published : 12 May 2020 08:54 PM
Last Updated : 12 May 2020 08:54 PM

மகாராஷ்டிர மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழர்கள்; ஆட்கொணர்வு மனு :தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிராவில் உள்ள 400 தமிழர்களை மீட்கக் கோரிய ஆட்கொணர்வு மனு குறித்து தமிழக டிஜிபி, மகாராஷ்டிராவின் சங்லி மாவட்ட எஸ்.பி. ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சூரியபிரகாசம் சமூக ஆர்வலர் என்ற முறையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார், அவரது மனுவில், ''மகாராஷ்டிராவில் உள்ள சங்லி மாவட்டத்தில் குப்வாட் என்ற கிராமத்தில் கணேசன் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வாழ்வாதாரத்திற்காக தமிழகத்திலிருந்து மகாராஷ்டிரா சென்றவர்கள் கரோனா ஊரடங்கு காரணமாக ஊர் திரும்ப முயன்றனர். தமிழகத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் அனைவரும் தலா 3 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக அங்கிருக்கும் தமிழர்கள் பேட்டி அளித்துள்ளனர்.

கடுமையான வெயில் காலத்தையும் பொருட்படுத்தாமல், மனிதாபிமானமற்ற முறையில் ஏழைத் தமிழர்களை அடைத்து வைத்திருப்பது அவர்கள் வாழ்வதற்கான உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இன்னமும் மகாராஷ்டிராவில் சிக்கி இருக்கும் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் மீட்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, ''மலேசியாவில் இருப்பவர்களை மீட்கும்போது மகாராஷ்டிராவில் சிக்கி இருப்பவர்களை மீட்பதில் ஏன் தயக்கம் காட்டப்படுகிறது?''2 என்று கேள்வி எழுப்பினர்.

மகாராஷ்டிராவிலிருந்து 900 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மீதமுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக தமிழக டிஜிபி திரிபாதி, மகாராஷ்டிரா சங்லி மாவட்ட எஸ்.பி. ஆகியோர் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x