Published : 12 May 2020 07:47 PM
Last Updated : 12 May 2020 07:47 PM
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு பலகட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஓர் அங்கமாக, சென்னையிலிருந்து பொதுமுடக்கம் அறிவித்த பின்பு வந்தவர்கள் தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்துகொள்ளுமாறு காவல்துறையினர் குமரி மாவட்டத்தில் கிராமம், கிராமமாகப் போய் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்றின் தொடக்கத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தீவிரக் கண்காணிப்புக்கு உள்ளானார்கள். அவர்களுக்கு விமான நிலையத்திலேயே கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஊர் திரும்பியதும் அவர்களை அவர்களே தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இதையெல்லாம் வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் கண்காணித்து வந்தனர். விமான சேவைகள் முற்றாக ரத்தான நிலையில், இப்போது வெளிமாவட்டங்களில் இருப்போர் மட்டும், இ-பாஸ் பெற்று சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.
அந்த வகையில் குமரி மாவட்டத்துக்கு வெளியூர்களில் இருந்து வருவோர் மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழியிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றனர். அங்குள்ள அறிஞர் அண்ணா கலை -அறிவியல் கல்லூரியில் உள்ள கரோனா பரிசோதனைக்கூடத்தில் அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அதன் முடிவுகள் வர ஒருநாள் ஆகும் என்பதால் சோதனைக்குப் பின் அவர்கள் கன்னியாகுமரிக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள விடுதிகளில் அவர்களது சொந்த செலவிலேயே தங்கவைக்கப்பட்டு வருகிறார்கள்.
கரோனா பரிசோதனையின் முடிவுகள் தெரியவந்த பின்னரே, அவர்கள் வீடு திரும்ப முடியும். வீட்டுக்குச் சென்றாலும் இரண்டு வாரங்கள் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அதேநேரம் அவர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
ஆனால், அரசு இத்தனை விழிப்போடு வெளியூரிலிருந்து வரும் நபர்களை எல்லையிலேயே தடுத்து நிறுத்தி சோதனை செய்தாலும், சிலர் அதையெல்லாம் தாண்டி குறுக்கு வழிகளில் சொந்த ஊர்களுக்கு வந்துவிடுகிறார்கள். இப்படி வருவோரைக் கண்காணித்து சோதனைக்கு உட்படுத்த காவல் துறையும், வருவாய்த்துறையினரும் தீவிரமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, கரோனாவின் உற்பத்தி கேந்திரமாக கோயம்பேடு மாறியிருப்பதால் சென்னையில் இருந்து வந்தவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். காவல் துறையினர் தங்கள் ஜீப்களில் மைக் மூலம், ‘சென்னையில் இருந்து வந்தவர்கள் தாங்களாகவே முன்வந்து கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’ எனக் கிராமங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை தொடக்கத்தில் கரோனா நோய் கண்டறியப்பட்ட 16 பேரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். இப்போது சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வந்தோருக்கு கரோனா தொற்று உறுதியாகி சிகிச்சையும் பெற்று வருகின்றனர். இதனிடையே சென்னையில் இருந்து வந்த மயிலாடி பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கபட்டிருந்த அவருக்கு சோதனை முடிவில் கரோனா இருப்பது தெரியவந்ததால் சென்னையில் இருந்து வருவோரை மிகத் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT