Published : 12 May 2020 07:39 PM
Last Updated : 12 May 2020 07:39 PM

கரோனாவுக்கு போலி மருந்து: திருத்தணிகாசலத்துக்கு 6 நாள் போலீஸ் காவல் 

கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக தகவல் பரப்பிய சித்த மருத்துவமனையை நடத்தி வந்த திருத்தணிகாச்சலத்தை 6 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவினருக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில், சித்த மருத்துவமனையை நடத்திவரும் திருத்தணிக்காசலம் என்பவர் தான் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறினார். அது செய்தியாக வெளியானது. இந்நிலையில் முதல்வர் அனுப்பிய நோயாளிகளில் 2 பேரைக் குணப்படுத்தியதாகவும், முதல்வர் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றைக் குறித்த தவறான தகவலை சமூக ஊடகங்களில் பரப்பியதாகவும் திருத்தணிகாசலத்துக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனை நடத்தி வந்தார்.

இந்த சூழலில் பொதுமக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாகச் செயல்பட்டு வரும் திருத்தணிகாசலம் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் திருத்தணிகாசலம் தலைமறைவானார்.

இந்நிலையில் திருத்தணி அருகே கடந்த வாரம் திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவர் மீது 188- (அரசு பிறப்பித்த உத்தரவை மீறிச் செயல்படுதல்), Epidemic Diseases Act Sec3- (தொற்றுநோய் தடுப்பு சட்டம்), 505(1)(b)- (உள்நோக்கத்தோடு தவறான தகவல்களைப் பரப்புதல்), 153 (A)- (பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்தனர்.

திருத்தணிகாசலத்திடம் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் போலீஸார், அவரை எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திருத்தணிகாசலம் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் குணப்படுத்துவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி திருத்தணிகாசலம் தாக்கல் செய்த மனு நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு காணொலிக் காட்சி மூலம் எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரோஸ்லின் துரை முன்பு விசாரணைக்கு வந்தது, திருத்தணிகாசலம் முறையாக சித்த மருத்துவம் படித்தவரா, சிகிச்சை அளிப்பதற்கான தகுதி உள்ளதா என்பன உள்ளிட்ட பல கோணங்களில் அவரை விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரை விசாரிக்க 7 நாள் காவல் வழங்க வேண்டுமென போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது பூந்தமல்லி கிளைச் சிறையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் ஆஜரான திருத்தணிகாசலம், விசாரணைக்கு இதுவரை ஒத்துழைத்தது போல இனியும் நடக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் காவலில் செல்ல விருப்பமில்லை என்றும் கூறினார். மேலும், தூக்கமின்மை மற்றும் மன அழுதத்தத்தில் இருப்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ரோஸ்லின் துரை, திருத்தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இன்று முதல் மே 18-ம் தேதி வரை விசாரணை நடத்திவிட்டு மே 18 மாலை 6 மணிக்கு ஆஜர்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார். வரும் 6 நாட்களிலும் திருத்தணிகாசலத்தை அவரது வழக்கறிஞர் சந்தித்துப் பேசவும் அனுமதி அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x