Published : 12 May 2020 05:57 PM
Last Updated : 12 May 2020 05:57 PM
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலியை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், ஆணையர் பிரகாஷ் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களுக்குத் தகவல்கள் தெரிவிக்கவும், அது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஏற்கெனவே 24 மணிநேரம் இயங்கும் தொலைபேசி எண்ணுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
மேலும், கரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் 100 தொலைபேசி அழைப்புகளுடன் கூடிய தொலைபேசி ஆலோசனை மையம் (Tele Counseling) செயல்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் கரோனா கண்காணிப்புச செயலியின் (Corona Monitoring App) மூலம் காய்ச்சல் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு இந்த தொலைபேசி ஆலோசனை மையத்திலிருந்து தொடர்பு கொண்டு தேவைக்கேற்ப மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் சாதாரண சிகிச்சைகளுக்காக மருத்துவரையோ (அ) மருத்துவமனைகளுக்கோ செல்வதற்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டும் கரோனா வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்கும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தனுஷ் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இச்செயலியைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சிகிச்சையை அதற்குரிய மருத்துவர்களிடம் காணொலி மூலம் (Video Call) 24 மணிநேரமும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இதில் கரோனா தொடர்பான அறிகுறிகள் உள்ள நபர்கள் இச்செயலி மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெறும்பொழுது சம்பந்தப்பட்ட நபருக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளை மருத்துவர் கேட்டறிந்து அவருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்ய வேண்டியிருப்பின், உடனடியாக மருத்துவரின் மூலம் குறுஞ்செய்தி தொலைபேசி அழைப்பு மையத்திற்கு அனுப்பப்படும்.
பின்னர், தொலைபேசி அழைப்பு மையத்திலிருந்து சம்பந்தப்பட்ட மண்டல மருத்துவ அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட அந்த நபருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் முதியோர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் தங்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை எந்தவித சிரமமின்றி வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம்.
முன்னதாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மண்டல சிறப்பு குழு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று (12.05.2020) ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா வைரஸ் தொற்று பாதித்த 4,371 நபர்கள் வசித்த 690 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு பொது சுகாதாரத்துறையின் அனைத்து நடைமுறைகளைப் பின்பற்றி வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த 628 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுமார் 4 லட்சத்து 25 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்தப் பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகின்றன.
முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முழு தெருக்களையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அடைப்பதை தவிர்த்து, வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு (அ) அவரது வீட்டின் அருகாமையில் உள்ள இரண்டு, மூன்று வீடுகளை மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றி, பொதுசுகாதாரத்துறையின் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் கடுமையாக கடைப்பிடிக்க இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் தலைமையிலான மண்டல சிறப்பு குழு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு குழு அலுவலர் பாஸ்கரன், இணை ஆணையாளர் (சுகாதாரம்) மதுசுதன் ரெட்டிதுணை ஆணையாளர் இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் தலைமையிலான மண்டல சிறப்பு குழு அலுவலர்கள் மற்றும் தனுஷ் ஹெல்த்கேர் நிறுவன ஆலோசகர் ஜெயக்குமார் உட்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT