Published : 12 May 2020 05:45 PM
Last Updated : 12 May 2020 05:45 PM

கரோனா வார்டில் உயிரைப் பணயம் வைத்து பணிபுரியும் எங்களுக்கு ஊதியம் வெறும் ரூ.14,000: உலக செவிலியர் தினத்தில் ஒப்பந்த செவிலியர்கள் வேதனை

மதுரை

குடும்பத்தைப் பொருட்படுத்தாமல் கரோனா வார்டில் உயிரைப் பணயம் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் எங்களை பணிநிரந்தரம் செய்யாமல் அரசு மாத ஊதியம் ரூ.14,000 மட்டுமே வழங்குகிறது, என்று உலக செவிலியர் தினமான இன்று எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்கள் வேதனை தெரிவித்தனர்.

கடந்த 2015-ம் ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவப் பணிகள் தேர்வாணையம் (எம்ஆர்பி) மூலம் தமிழக அரசு போட்டித்தேர்வு வைத்து 7,744 பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை பணிநியமனம் செய்தது. ஆரம்பத்தில் ரூ.7700 ஊதியம் அடிப்படையில் பணிமர்த்திய அரசு, இவர்களை 2 ஆண்டிற்கு பிறகு பணிநிரந்தரம் செய்வதாக உறுதியளித்து இருந்தது.

ஆனால், தற்போது வரை இவர்களை பணிநிரந்தரம் செய்யாமல் இவர்களுக்கு ரூ.14,000 ஊதியம் மட்டுமே வழங்குகிறது. தற்போது அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள ‘கரோனா’ வார்டுகளில் இவர்கள்தான் பெரும்பாலும் பணிபுரிகின்றனர்.

அதனால், இவர்களில் பலருக்கு ‘கரோனா’ தொற்றும் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், தொடர்ந்து ‘கரோனா’ வார்டுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று உலகமே செவிலியர் தினம் கொண்டாடிய நிலையில் தமிழக அரசு மருத்வமனைகளில் இந்த எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களோ அந்த தினத்தை கொண்டாடாமல் கறுப்பு பேட்ஜ் அணிந்து ‘கரோனா’ வார்டுகளில் பணிபுரிந்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கம்

மதுரை மாவட்ட செயலாளர் எஸ்.கே.சுஜாதா கூறியதாவது:

2015ம் ஆண்டு தகுதித்தேர்வு அடிப்படையில் பணியமர்த்தியபோது 2 ஆண்டுகள் கழித்து காலமுறை ஊதியம் வழங்குவதாக பணி ஆணையிலே அரசு குறிப்பிட்டுள்ளது. ஆனால், கூறியபடி வழங்கவில்லை.

5 ஆண்டுகள் முடிந்துவிட்டது. பலதரப்பட்ட ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம் வாயிலாக கோரிக்கை வழங்கி அரசுக்கு தெரியப்படுத்தினோம். அவர்கள் செவி சாய்ப்பதாக தெரியவில்லை.

அரசு மருத்துவமனைகளில் காலமுறை ஊதியம் பெறும் செவிலியர்களும், நாங்களும் ஒரே வேலையை செய்கிறோம். பணி நேரமும் ஒன்றுதான். ஆனால், அவர்கள் எங்களை விட 4 மடங்கு ஊதியம் பெறுகிறார்கள்.

‘கரோனா’ வார்டுகளில் காலமுறை ஊதியம் பெறும் செவிலியர்கள் பணிபுரிய அச்சமடைந்தநிலையில் எங்களைதான் மருத்துவத்துறை அதிகாரிகள் அதிகமாக பணியமர்த்தினார்கள். நாங்களும் எங்கள் குடும்பத்தைவிட்டுபிரிந்து உடல்ஆரோக்கியத்தை பொருட்படுத்தாமல் உயிரை பனையம் வைத்து இந்த சொற்ப ஊதியத்திற்கு அந்த வார்டுகளில் பணிபுரிந்து வருகிறோம். காலமுறை ஊதியம் பெறும் செவிலியர்களை போலவே கடந்த 5 ஆண்டாக

சமவேலை பார்க்கும் எங்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2 ஆண்டிற்கு முன் எங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க உத்தரவிட்டுள்ளது.

ஆனால், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. செவிலியர் தினத்தை போற்றும்வகையில் இன்று(நேற்று) உலக சுகாதாரநிறுவனமே இந்த ஆண்டை செவிலியர் ஆண்டாக அறிவித்துள்ளது.

அப்படிப்பட்ட எங்களை தாயுக்கு இணையாகவும், தெய்வங்குளுக்கு இணையாகவும் வெற்று வார்த்தைகளால் புகழாமல் நியாயப்படி எங்களுக்கு கிடைக்க வேண்டிய காலமுறை ஊதியத்தை

இந்த ஆண்டாவது கிடைக்க வேண்டிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘கரோனா’ நோயால் ஒட்டுமொத்த உலகமே வீட்டிற்குள் மடங்கியநிலையில் நாங்கள் அந்த நோயாளிகளுடனே இருந்து கவனிக்கிறோம்.

‘கரோனா’வுடன் போராடிய எங்கள் வாழ்க்கையில் அரசு ஒளியேற்ற வேண்டும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x