Published : 12 May 2020 04:05 PM
Last Updated : 12 May 2020 04:05 PM
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கரோனா பணியில் ஈடுபட்டுள்ள செவிலிர்களூக்கு பாதபூஜை செய்து கவுரவிக்கப்பட்டனர்.
மே 12-ம் தேதியான நேற்று உலக செவிலியர் தினம் கடைபிடிக்கப்பட்டது. கரோனா தடுப்பு பணியில் இரவு, பகல் பாராமால் உயிரை பணயம் வைத்து செவிலிர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவதால், நடப்பாண்டு செவிலியர் தினம் சுகாதாரத்துறை, மற்றும் சமூக ஆர்வலர்களால் பெரும் மரியாதையாக கடைபிடிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் நேற்று ஒருவொருக்கொருவர் செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
அவர்களுக்கு மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், மற்றும் மருத்துவ அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர். கரோனா அச்சத்திற்கு மத்தியில் உயிர் பயமின்றி கரோனாவை ஒழிக்கும் நோக்கத்துடன் செவிலியர்கள் உயிரை பணயம் வைத்து மேற்கொள்ளும் பணி குறித்து மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் நினைவு கூர்ந்தனர்.
இதைப்போல் குமரி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளிலும் செவிலியர் தினம் கடைபிடிக்கப்பட்டது. தோவாளை ஊராட்சி சார்பில் தோவாளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தோவாளை ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன், துணை தலைவர் தாணு மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் செவிலியர்களுக்கு மலர்களால் பாதபூஜை செய்து வணங்கினர்.
மேலும் செவிலிர்களின் அர்ப்பணிப்பான மருத்துவ சேவையை நினைவு கூர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவர் சீதா, செவிலியர்கள் லினிஷா, தமிழ்மணி, சக்கரவர்த்தினி, சிவகாமி, மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT