Published : 12 May 2020 10:57 AM
Last Updated : 12 May 2020 10:57 AM
தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச்சிற்பங்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய சிறப்புமிக்க கைவினைப் பொருட்களை புவிசார் குறியீட்டு பதிவகத்தில் பதிவு செய்ய தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகமான பூம்புகார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தியை நியமித்துள்ளது.
இதையடுத்து, தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மர வேலைப்பாடு ஆகிய இரண்டு பொருட்களுக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து கிடைத்துள்ளது.
பூம்புகார் சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு இரு பொருட்களுக்கும் புவிசார் குறியீடுக்காக விண்ணப்பிக்கப்பட்டு, 2014-ம் ஆண்டு டெல்லியில் ஏழு நபர்களைக் கொண்ட புவிசார் குறியீடு வல்லுநர் குழு முன்பாக சஞ்சய்காந்தி ஆஜராகி வாதாடினார். இதன் தொடர்ச்சியாக பல்வேறு சட்டப்பணிகளை மேற்கொண்டு கடந்த 2020 ஜனவரி 10-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு தற்போது இதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு
தஞ்சாவூர் நெட்டி என்பது தண்ணீரில் விளையும் ஒரு வித செடி வகையைச் சேர்ந்தது. தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள குளம், ஏரி போன்றவற்றில் விளைகிறது. இதனுடைய நடுபாகம் தாமரை தண்டு போன்று நீளமாகவும், மேல்பகுதி சிறு சிறு கிளைகளாகவும் இருக்கும். இந்த நெட்டி டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்கள் வரை கிடைக்கும். இந்த நெட்டியைப் பறித்து வெயிலில் உலர்த்தி, பதப்படுத்தி அதில் கைவினைப்பொருட்கள், பரிசுப் பொருட்கள் செய்யப்படும்.
இத்தகைய நெட்டி மூலம் கோயில் அமைப்புகள், உருவ அமைப்புகள், இயற்கை காட்சிகள், கட்டிட அமைப்புகள் மற்றும் வாழ்த்து மடல்கள் செய்யலாம். நெட்டியில் செய்யப்படும் கலைப்பொருள்கள் தந்தத்தில் செய்யப்பட்டவை போன்றே வெண்மையாக அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. இத்தகைய வேலைப்பாட்டின் சிறப்பாகத் திகழ்வது தஞ்சாவூர் பெரிய கோயில், மாமல்லபுரம் கடற்கரை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை என மட்டுமின்றி இயற்கை உருவ அமைப்புகள் உருவாக்கப்பட்டு அனைவரையும் கவர்ந்து இருக்கிறது.
தமிழர்களின் தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய விழாவான மாட்டுப்பொங்கலின்போது மாடுகளுக்குப் பயன்படுத்தும் மாலையினைச் செய்வதற்கு இந்த நெட்டி பயன்படுத்தப்படுகிறது. எனவே, இதன் பயன்பாடு என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழர்களின் வாழ்வோடு பிணைக்கப்பட்டு வருகிறது.
தனிச்சிறப்பு
இதனோடு வேறு எந்தப் பொருட்களையும் சேர்க்காமல் நெட்டியை மட்டுமே கொண்டு செய்யப்படுவதும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதன் வண்ணம் தன்மை மாறாமல் இருப்பதும் இதன் சிறப்பாகும். முற்றிலும் கைகளாலேயே செய்யப்படும் இந்த கைவினைப் பொருட்களுக்கு எந்தவித இயந்திர உதவியும் தேவையில்லை.
தஞ்சாவூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட இந்த கைவினைக் கலைத்தொழில் அதன் தன்மையும், தனிச்சிறப்பும் மாறாமல் தஞ்சாவூர், கும்பகோணம் பகுதியில் சுமார் 150 பேர் இதனைச் செய்து வருகின்றனர்.
அரும்பாவூர் மரச் சிற்பம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் என்ற கிராமத்தில் தயாரிக்கப்படும் மரச்சிற்பம் உலகப் புகழ் பெற்றது. இந்த மரச்சிற்பத்துக்கு 250 வருடங்களுக்கு முன்பே பழமையான வரலாற்றுச் சிறப்பு உள்ளது.
இந்தப் பகுதியில் வாழும் போயர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் இக்கலையில் சிறந்து விளங்குகின்றனர். இவர்களின் பிரதான தொழில் தேர் செய்யும் தொழிலாக அமைந்திருக்கிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், அவிநாசி, வடபழனி, ஆவுடையார்கோயில், விராலிமலை, திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் என தமிழகத்தின் பல பிரசித்தி பெற்ற கோயில்களில் தேர்களைச் செய்தவர்கள் இந்த தழுதாலை மரச்சிற்பிகளே.
தேரின் உயரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் ஏழு நபர்கள் வரை அந்தப் பகுதிக்கே சென்று மாதக்கணக்கில் தங்கிப் பணி முடித்து வெள்ளோட்டம் பார்த்துவிட்டு ஊர் திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கோயில் கொடிமரம் செய்வதிலும் இதே நடைமுறையைக் கையாளுகின்றனர்.
அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய ஊர்களில் உள்ள பழமையான தேர்கள் அனைத்தும் இவர்களது முன்னோர்களால் வடிவமைக்கப்பட்டவை ஆகும். இத்தகைய மர வேலைப்பாட்டுக்கு தேக்கு, மாவிலகை, பூவாகம், வேம்பு, மா, அத்தி முதலிய மரங்களே பயன்படுத்தப்படுகின்றன.
தனிச்சிறப்பு
அனைத்துவிதமான இறை உருவங்கள், கொடிமரம், வெள்ளெருக்கில் செய்யப்படும் விநாயகர், ராமர் பாதம் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவை. இறை உருவம் மற்றும் தேர் வேலைகள் செய்யும் போது இவர்கள் அசைவ உணவுகளைத் தவிர்த்து விரதமிருந்து இவற்றை மேற்கொள்கின்றனர். இத்தகைய சிற்பங்கள் ஒரு அடி முதல் 12 அடி வரை செய்யப்படுகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா போன்ற அயல் நாட்டினரால் பெரிதும் விரும்பி வாங்கப்படுகின்றன.
இவை அனைத்தும் சிற்பசாஸ்திரம் முறையிலேயே தயார் செய்யப்படுகின்றன. சிற்பங்கள் செய்வதற்கு உளி, சுத்தியல் முதலிய உபகரணங்களைப் பயன்படுத்தி முற்றிலும் கைவினைப் பொருட்களாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதுகுறித்து வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி கூறுகையில், "தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச்சிற்ப வேலைப்பாடுகளுக்கு புவிசார் அங்கீகாரம் கேட்டு 2013-ல் விண்ணப்பிக்கப்பட்டது. இதையடுத்து 2020 ஜனவரி 10-ம் தேதி அரசிதழில் ஆட்சேபனை கேட்டு வெளியிடப்பட்டது. நான்கு மாதம் இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதற்கு ஏதும் ஆட்சேபனை வராததால் இன்று (மே 12) இந்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக துறை சார்பில் இயங்கி வரும் புவிசார் குறியீடு பதிவகத்தின் பதிவாளர் மற்றும் துணைப் பதிவாளர் அறிவிப்பினை வெளியிட்டனர். இதற்கான சான்றிதழ் ஒரிரு தினங்களில் வழங்கப்படும்.
தமிழகத்தில் இதுவரை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, வீணை, கலைத்தட்டு, நாச்சியார்கோயில் குத்துவிளக்கு உள்ளிட்ட 35 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT