Last Updated : 11 May, 2020 08:22 PM

 

Published : 11 May 2020 08:22 PM
Last Updated : 11 May 2020 08:22 PM

‘ஒரு கையில் கபசுர குடிநீர், மற்றொரு கையில் மது’: அரசின் செயல் முரண்படுவதாக நீதிபதிகள் கருத்து

மதுரை

கரோனா பரவல் காலத்தில் தமிழக அரசு ஒரு கையில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் கபசுர குடிநீரையும், மற்றொரு கையில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மதுபானத்தையும் வைத்திருப்பது முரண்பாடாக இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கி, மது விற்பனையின் போது சமூக விலகலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு 2 நாள் விற்பனை நடைபெற்றது. பின்னர் டாஸ்மாக் கடைகளில் சமூக விலகலை பின்பற்றவில்லை என்று கூறி மதுபான விற்பனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து, ஆன்லைனில் மது விற்க அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இதனிடையே டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை பழைய குயவர் பாளையத்தை சேர்ந்த போனிபாஸ் பொது நல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள், பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் இன்று வீடியோ கான்பரன்ஸ் வசதியில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் வீராகதிரவன் வாதிடுகையில், டாஸ்மாக் கடைகளை திறந்தால் கரோனா பரவல் அதிகரிக்கும். சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிலும், இந்த மனுவிலும் கோரிக்கை ஒன்றாக இருந்தாலும், இந்த மனுவில் கோரிக்கைக்காக கூறப்பட்டுள்ள காரணம் வேறு.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மது விற்பனையின் போது சமூக விலகல் முறையாக பின்பற்றப்படும் என அரசு உறுதியளித்ததால் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அரசு அளித்த உறுதிமொழிபடி மது விற்பனையின் போது சமூக விலகல் கடைபிடிக்கப்படவில்லை. இதனால் டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டது.

உடலில் எதிர்ப்பு சக்தி குறைவது கரோனா பரவலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால் மதுவை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனமே அறிவுறுத்தியுள்ளது. மது குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், மது குடிப்போரை கரோனா எளிதில் தொற்றிக்கொள்ளும்.

இது அரசுக்கு நன்கு தெரியும். இருப்பினும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒருபுறம் கபசுர குடிநீரை வழங்கும் அரசு, மற்றொரு புறம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மதுவை விற்பனை செய்கிறது. கரோனா பாதிக்கப்படும் நபரால் அவரது குடும்பத்தினரும், அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்தவர்களும் பாதிப்பை சந்திக்கின்றனர்.

மது பழக்கத்தால் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கின்றன. கடந்த 7-ம் தேதி மட்டும் மது அருந்தியவர்களால் 10 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்வது மாநில அரசின் கடமை. ஆனால் அரசின் நடவடிக்கை அந்த நோக்கத்தில் செல்லவில்லை. மது விற்பனை நடைபெறாத கேரளம், புதுச்சேரியில் கரோனா பாதிப்பு அதிகம் இல்லை. எனவே தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

இதற்கு அரசு தரப்பில், டாஸ்மாக் கடைகளில் சமூக விலகல் கடைபிடிக்கப்பட்டது. மீறப்பட்ட இடங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் இருப்பதால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், கரோனா பரவலின் போது அரசு ஒரு கையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரையும், மறுகையில் நோய் எதிர்ப்பு சக்தியை சீர்குலைக்கும் மதுவையும் வைத்திருப்பது முரண்பாடாக உள்ளது என்றனர். பின்னர் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x