Published : 11 May 2020 05:38 PM
Last Updated : 11 May 2020 05:38 PM
புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணிபுரிந்த போலீஸாருக்கு கரோனா பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் 12 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது புதுச்சேரி மாவட்டத்தில் இரண்டு பேரும், காரைக்கால் மாவட்டத்தில் ஒருவரும் என மூன்று பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கக் கூடிய பகுதிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. புதுச்சேரியைப் பொறுத்தவரை அரியாங்குப்பம், திருபுவனை, மூலக்குளம், முத்தியால்பேட்டை, திருக்கனூர் உள்ளிட்ட பகுதிகள் கரோனா வைரஸ் தொற்றால் சீல் வைக்கப்பட்டு அங்கு 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதனிடையே முத்தியால்பேட்டை, திருக்கனூர், அரியாங்குப்பம் உள்ளிட்ட சில இடங்களில் சீல் அகற்றப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணிபுரிந்த போலீஸாருக்கு வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருப்பதால், அவர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்ய காவல்துறை தலைமையகம் முடிவு செய்தது.
இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணிபுரிந்த போலீஸாருக்கு புதுச்சேரி, கோரிமேடு பகுதியில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு, கரோனா பரிசோதனை இன்று செய்யப்பட்டது. சிறப்பு மருத்துவக் குழுவால் உமிழ்நீர் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை சீனியர் எஸ்.பி. ராகுல் அல்வால் நேரில் பார்வையிட்டார். எஸ்பி ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முதல் கட்டமாக சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் என 100 போலீஸாருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவர்களுக்கான முடிவு நாளை மாலை தெரியவரும் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT