Published : 11 May 2020 04:55 PM
Last Updated : 11 May 2020 04:55 PM
பட்ஜெட் போடாததால் பணம் இல்லை எனவும் அரிசி வழங்கப் பணம் பற்றாக்குறையாக உள்ளதாகவும் புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
''ரயில் சேவை நாளை முதல் தொடங்க உள்ளது. டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் பணியாற்றி வருபவர்கள் புதுச்சேரி திரும்ப வாய்ப்பு உள்ளது. தோராயமாக 5 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அனைவருக்கும் பரிசோதனை நடத்துவது கடினம். அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை. மேலும் நிறைய மருத்துவர்கள், செவிலியர்கள் 24 மணிநேரமும் பணிபுரிய வேண்டியிருக்கும்.
அதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குச் சென்று வெளியே வராமல் தனித்து இருக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்களுடன் வெளியில் இருந்து வருபவர்கள் தொடர்பு கொள்ளாமல் இருந்தால் மட்டுமே புதுச்சேரியில் கரோனா தொற்று கட்டுப்பாட்டிற்கு வரும். இல்லையென்றால் தற்போது 1, 2 என இருக்கும் கரோனா தொற்று அதிகரித்துவிடும்.
புதுச்சேரியில் இன்னும் பட்ஜெட்டுக்கு ஒப்புதுல் இல்லை. பட்ஜெட் போடுவதற்கான கோப்புகளைத் தயாரித்து அனுப்பினால் விளக்கம் கேட்டுத் திருப்பி அனுப்பப்படுகிறது. பட்ஜெட் போடாததால் பணம் எதுவும் இல்லை. மஞ்சள் கார்டுகளுக்கு அரிசி வழங்க ரூ.6 கோடி நிதி தேவைப்படுகிறது. அதில் ரூ.4 கோடி பற்றாக்குறையாக உள்ளது. அரிசிக்கான தலைப்பில் பணம் இல்லை. பட்ஜெட் போட்டால் அந்தத் தலைப்பில் பணம் ஒதுக்கி, அரிசியை வாங்கி மக்களுக்குக் கொடுக்கலாம்.
மத்திய அரசிடம் பெற்ற கடனும், அதற்கான வட்டியுமாகச் சேர்த்து ஆண்டிற்கு ரூ.1300 கோடி செலுத்த வேண்டியுள்ளது. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதார இழப்பைக் கணக்கில் கொண்டு மத்திய அரசு கடன் மற்றும் அதற்கான வட்டியை இந்த ஒரு ஆண்டு கேட்காமல் தள்ளி வைக்க வேண்டும். கரோனா பாதிப்பில் இருந்து பிற மாநிலங்கள் விரைவில் மீண்டாலும் புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகள் முழுமையாக இயங்க இன்னும் 6 மாத காலம் ஆகும். ஏனென்றால் புதுச்சேரியில் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு தேவையான கச்சாப் பொருட்கள் ஏதும் இல்லை. அதுபோல் சுற்றுலா முன்பு இருந்ததைப்போல் மீண்டு வருவதற்கு ஓராண்டு காலம் ஆகும்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT