Published : 11 May 2020 05:15 PM
Last Updated : 11 May 2020 05:15 PM
அமெரிக்காவின் பல மாகாணங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க உதவ வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், விமானத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோருக்கு திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்த திமுகவின் செய்திக்குறிப்பு:
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், விமானத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
கரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியர்களைக் குறிப்பாக, தமிழர்களை அழைத்துவர சென்னைக்குப் போதிய விமானங்களை இயக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, டி.ஆர்.பாலு எழுதியுள்ள கடிதம்:
கரோனா தொற்று முதன்முதலாக பரவத் தொடங்கிய போது, அமெரிக்காவில் தங்கியுள்ளவர்களை சென்னைக்கு அழைத்து வரத் திட்டமிட்டு, சென்னைக்கு ஒரு விமானம் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த விமானமும் மும்பை வழியாக சென்னைக்கு வரும் என்றும் அது சிகாகோவிலிருந்து புறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தமிழர்கள் பாதிப்பு
அதேசமயம், மற்ற பெரு நகரங்களான நியூயார்க்கிலிருந்தோ, நியூ ஜெர்ஸியிலிருந்தோ விமானங்கள் இயக்கத் திட்டமிடப்படவில்லை. அங்கும் பெருமளவில் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மாணவர்கள், மென்பொருள் வல்லுநர்கள், இந்தியாவிலிருந்து சென்றுள்ள சிறுவர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அது போன்ற பெரு நகரங்களில் ஏராளமாக உள்ளதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். அவர்கள் அனைவரும் தங்களின் இருப்பிடங்களிலிருந்து சிகாகோ சென்று, அங்கு விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்பது அவ்வளவு எளிதில் இயலாத ஒன்று.
மாணவர்கள் தவிப்பு
அத்துடன், கரோனோ தொற்று காரணமாக பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுவிட்டன. அதனால் மாணவர்களுக்கான ஹாஸ்டல் வசதிகள் இல்லாமல், அவர்களால் வெளியிலும் தங்க முடியவில்லை. அவர்களின் நிதி வசதியும் சிரமமாக இருக்கிறது. உணவுப் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி இங்குள்ள அவர்களின் பெற்றோர்களும், இப்போதுள்ள நோய்த்தொற்று பிரச்சினை காரணமாக தங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் உடல் நலம் குறித்தும் பாதுகாப்பு குறித்தும் மிகுந்த கவலையுடன் உள்ளனர்.
அமெரிக்காவில் நிலைமை மோசம். அதுமட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களும், குடும்பத்தினரும் அமெரிக்காவில் தவித்துக் கொண்டிருப்பவர்களின் இருப்பிடத்திற்கும் செல்லவும், அவர்களுக்குப் பண உதவி செய்வதும் இப்போதைய நிலையில் நிச்சயம் இயலாது. நிலைமையோ நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது.
அமெரிக்காவில் தவித்துக் கொண்டிருப்பவர்களிடமிருந்தும், அவர்களின் பெற்றோர் மட்டும் குடும்பத்தார்களிடமிருந்து எனக்கு ஏராளமான வேண்டுகோள்கள் வந்தவண்ணம் உள்ளன. நியூயார்க், நியூ ஜெர்ஸி உள்ளிட்ட பெரு நகரங்களிலிருந்து இந்திய மாணவர்கள் மற்றும் மென் பொருள் வல்லுநர்கள் தங்களின் பாதுகாப்பு குறித்தும், இந்தியா திரும்புவது குறித்தும் பெரும் கவலையுடன் உள்ளனர்.
தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும்
அவர்களின் பெரும்பாலோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், நான் அங்கிருந்துதான் அவர்க ளின் பிரதிநிதியாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய துரதிர்ஷ்டமான நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பிரச்சினைகளை மனிதாபிமான முறையில் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவற்றைக் கருத்தில் கொண்டு சென்னைக்கு இரண்டாம் கட்டமாக விமானம் இயக்கும்போது, அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களையும் அழைத்து வந்து, அந்த விமானத்தில் கொண்டு சேர்க்கவும் அல்லது மும்பை, டெல்லி வழியாக நியூயார்க், நியூஜெர்ஸி ஆகிய இடங்களில் இருந்து விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அது அமெரிக்காவில் தவித்துக் கொண்டிருக்கும் ஏராளமானவர்களுக்கும், மற்றவர்களுக்கும் உதவிகரமாக இருக்கும்”.
இவ்வாறு டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT