Published : 11 May 2020 04:37 PM
Last Updated : 11 May 2020 04:37 PM

காய்கனி வியாபாரத்துக்கு மாறிய டீ மாஸ்டர்: மாற்றுத் தொழில்களை நோக்கி மக்களைத் தள்ளும் கரோனா

படங்கள் உதவி: நிஷாந்த், ஜவஹர்

பொது முடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலையைப் பறித்திருக்கும் நிலையில், சிலர் இந்தக் காலத்துக்கேற்ப மாற்றுத் தொழில்களிலும் தங்களை இணைத்துக்கொண்டு வருகிறார்கள். எதிர்காலத்தை எண்ணி மூச்சுத் திணறும் நாட்களில் இப்படியான மாற்றுத் தொழில் வாய்ப்புகள் அவர்களுக்குக் கொஞ்சம் ஆசுவாசத்தைக் கொடுத்திருக்கின்றன.

நாகர்கோவில் செட்டிக்குளத்தில் டீக்கடை நடத்திவந்த சங்கர், இப்போது அதே கடையில் காய்கனி வியாபாரத்தைத் தொடங்கியிருக்கிறார். குமரியில் இன்று முதல் டீக்கடைகள் இயங்க அனுமதித்து விட்டாலும் ‘பார்சல் மட்டுமே அனுமதி’ என்னும் அதன் நடைமுறைச் சிக்கலினால் காய்கனிக் கடையை வியாபாரத்தையே தொடர்கிறார் சங்கர். அவரிடம் பேசியதிலிருந்து…

டீக்கடையிலிருந்து காய்கனி வியாபாரத்துக்கு மாறும் எண்ணம் எப்படி வந்தது?
பொது முடக்கம் அறிவித்த நாளிலிருந்து டீக்கடையத் திறக்க முடியல. அன்றாடத் தேவைக்கே யோசிக்குற மாதிரி கவலையும் ஏக்கமுமாவே ஒரு வாரம் போச்சு. டிங்கரிங் ஒர்க்‌ஷாப் வச்சிருந்த என்னோட மச்சினன் ராஜாவுக்கும் இதே நிலைமை. அவரோட ஒர்க்‌ஷாப்ல வேலை செஞ்சவங்களுக்கும் மொத்தமா வேலை போயிருச்சு. இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் புலம்பிக்கிட்டு இருந்தப்போதான், கரோனா காலத்தில் அரசு அனுமதிக்கும் தொழிலை நாம் ஏன் செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த காய்கனி வியாபாரம். நான், மச்சினன், அவரோட ஒர்க்‌ஷாப்புல வேலை செய்யுறவங்கன்னு இப்போ ஏழு குடும்பத்துக்கு வாழ்க்கைப்பாடு இந்தக் கடைதான்.

புது வியாபாரம் எப்படி இருக்கிறது?
காய்கனி வாங்குறதுக்கு எங்க ஊர்க்காரங்க வடசேரி பஸ் ஸ்டாண்ட்ல இருக்குற தற்காலிகச் சந்தைக்குப் போக வேண்டி இருந்துச்சு. இங்கிருந்து அது ரெண்டு, மூணு கிலோ மீட்டர் இருக்கும். இப்போ பஸ் ஓடாததால பைக், கார்ன்னு வச்சுருக்கிறவங்க வேணா போய் வாங்கிட்டுவர முடியும். மத்தவங்களுக்குக் கஷ்டம். அப்படியும் மீறிப்போனா அங்கேயும் கூட்டம் அலைமோதுது. இதையெல்லாம் ஆரம்பத்துல கொஞ்ச நாள் நாங்களும் அனுபவச்சதால காய்கனிக் கடை போடலாம்னு முடிவுபண்ணோம்.

கடையில் தனிமனித விலகலை எல்லாம் ஒழுங்காகக் கடைப்பிடிக்கிறீர்களா?
கடை வாசலிலேயே வட்டம் போட்டுருக்கோம். இது மாநகரப் பகுதி, தொடர்ந்து கண்காணிக்கவும் செய்றாங்க. அதனால, மக்கள் எல்லாம் தனிமனித இடைவெளி விட்டுத்தான் நிக்குறாங்க. கண்காணிப்பு இல்லை என்றாலும்கூட யாராச்சும் ஒட்டி நின்னா, உரிமையோட சத்தம்போட்டு அதட்டுவதற்கு நம்ம மக்கள்ல ஒண்ணு ரெண்டு பேர் இருக்கத்தான் செய்றாங்க.

பொது முடக்கத்தின் தொடக்கத்தில் இருந்ததைவிட இப்போது மக்களின் நுகர்வுதிறனில் மாற்றம் இருக்கிறதா?
தமிழ் நாட்டில் எந்த மாவட்டத்திலும் இல்லாத வழக்கம் ஒண்ணு குமரில உண்டு. கத்திரி, வெண்டை, தக்காளின்னு ஒரு சாம்பார் வைக்கத் தேவையான எல்லாமே 40 ரூபாய்ல கொடுப்பாங்க. அவியல் மலக்கறி, சாம்பார் மலக்கறினு கேட்டு வாங்குவாங்க. நாளாக நாளாக அப்படிலாம் வாங்குறவங்க குறைஞ்சிட்டாங்க. விலை மலிவா கெடைக்குற காய்கனிகளைத்தான் அதிகமா வாங்குறாங்க. அஞ்சு ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் எல்லாம் கேட்டு வாங்கிட்டுப் போறாங்க. அந்தளவுக்கு இப்ப மக்களின் வாங்கும்திறன் குறைஞ்சுடுச்சு.

அப்படி விலை குறைத்துக் கொடுப்பதில் லாபம் இருக்கிறதா?
அதில் லாபம் கிடையாது. எங்களாலும் சூழலைப் புரிஞ்சிக்க முடியுது. அதனால லாபம் பார்க்காம கொடுக்கிறோம். இது, வருமானமில்லாம வீட்டுக்குள்ளயே பொசமுட்டிக்கிட்டு இருந்ததால வந்த பக்குவமாவும் இருக்கலாம்.

இப்ப டீக்கடைகளை திறக்க அனுமதிச்சுட்டாங்க. இனிமேலயும் காய்கனி வியாபாரத்தைத்தான் தொடரப் போறீங்களா?
நாங்க ஏழு பேரும் மூணு கடையா போட்டுருக்கோம். எங்களோட வீடுகளுக்குத் தேவையான காய்கனிகள் கிடைச்சிடுது. அதுபோக, ஒவ்வொருத்தரும் 300 ரூபா சம்பளமா எடுத்துக்க முடியுது. வீட்டுக்குப் பக்கத்திலேயே காய்கனிகள் கிடைக்குதேன்னு மக்களும் எங்களுக்கு ஆதரவு கொடுக்கிறதால கடை ஓடிட்டு இருக்கு. ஆனால், டீக்கடைக்கு அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் தளர்ந்ததும் மீண்டும் டீக்கடை வியாபாரத்துக்கு போயிட வேண்டியது தான். வொர்க்‌ஷாப்களும் திறக்க அனுமதிச்சுட்டதால மத்தவங்களுக்கும் ரெண்டொரு நாளில் அவங்களோட வேலைகளைப் பார்க்கப் போயிருவாங்க.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x