Published : 11 May 2020 03:11 PM
Last Updated : 11 May 2020 03:11 PM

வழிபாட்டுத் தலங்களை திறக்கக் கோரிய வழக்கு: மே 17-க்குப் பின் முடிவு; உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் 

வழிபாட்டுத் தலங்களை திறக்கக்கோரும் வழக்கில் மே 17-ம் தேதி அன்று ஊரடங்கு முடிவடையும் நேரத்தில் ஆலோசித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவித்ததை அடுத்து வழக்கை மே 18-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.கே.ஜலில் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், “அரசின் நிதி நிலைமை பாதிக்கப்படுகிறது எனக் கூறி சிறு, குறு நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள், மதுபானக் கடைகள் ஆகியவற்றைத் திறக்கும் தமிழக அரசு, மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்க கூடிய, சாதகமான எண்ண ஓட்டத்தை உருவாக்கக் கூடிய வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிக்கவில்லை.

தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபடுவதற்கு அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

வழிபாட்டுத் தலங்களைத் திறந்தால் தனிமனித இடைவெளி கேள்விக்குறியாகிவிடும் என்றும், அங்கு அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று காவல்துறையோ, சுகாதாரப் பணியாளர்களோ பணிபுரிவது சிரமாக இருக்கும் என்பதால் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும் ஆவடியைச் சேர்ந்த சுமதி என்பவர் இடையீட்டு மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு அளித்த பதிலில் , “மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு மே 17-ம் தேதி வரை முடிவடைகிறது. அடுத்தகட்ட நிலை குறித்து மே 15, 16 தேதிகளில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

கோயம்பேடு மற்றும் மதுபானக் கடைகளில் மக்கள் கூடுவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மக்கள் உணர வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள் வழக்கை மே 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x