Published : 11 May 2020 01:12 PM
Last Updated : 11 May 2020 01:12 PM
கும்பகோணம் அருகே தாராசுரம் காய்கனி மொத்த மற்றும் சில்லறை வியாபார மார்க்கெட்டுக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து உருளைக்கிழங்கு ஏற்றிவந்த லாரி ஓட்டுநருக்குக் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் இன்று (திங்கள்) மார்க்கெட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.
கும்பகோணம் காய்கனி மார்க்கெட்டில் 450 பெரிய கடைகளும், 500க்கும் மேற்பட்ட சிறிய கடைகளும் உள்ளன. தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய மார்க்கெட் இதுவாகும்.
இங்கு தினந்தோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 300 டன் காய்கனிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 37 வயதுடைய லாரி ஓட்டுநர் ஒருவர், கும்பகோணம் மார்க்கெட்டுக்குக் கடந்த சில வாரங்களுக்கு முன் வெங்காயம் ஏற்றி வந்துள்ளார். பின்னர் கடந்த வாரம் கும்பகோணத்திலிருந்து மேட்டுப்பாளையத்துக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து உருளைக்கிழங்கு ஏற்றிக்கொண்டு கடந்த 8-ம் தேதி மீண்டும் கும்பகோணம் வந்தார்.
கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் சோதனைச் சாவடியில் வெளிமாவட்டத்துக்குச் சென்றுவிட்டு வந்த லாரியைச் சோதனை செய்து, லாரிக்குக் கிருமிநாசினி தெளித்தனர். பின்னர் லாரி ஓட்டுநருக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். இந்தப் பரிசோதனை முடிவு ஏப்.10-ம் தேதி இரவு வந்தது. அதில் லாரி ஓட்டுநருக்குக் கரோனா தொற்று உறுதி எனப் பரிசோதனை முடிவு வந்ததால், நகராட்சி மற்றும் மருத்துவத் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து லாரி ஓட்டுநர் மார்க்கெட்டுக்கு வந்து சக வியாபாரிகள், லாரி ஓட்டுநர்களோடு தொடர்பில் இருந்ததால் மார்க்கெட்டுக்கு இன்று (ஏப்.11-ம் தேதி) மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி நகராட்சி ஆணையர் லெட்சுமி முன்னிலையில் மார்க்கெட் மூடி சீல் வைக்கப்பட்டது. மேலும் மார்க்கெட்டில் இருந்த வியாபாரிகள், தொழிலாளர்கள் குறித்துக் கணக்கெடுத்து அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவக் குழுவினர் கண்காணிப்பில் உள்ளனர்.
இதையடுத்து தற்காலிக மார்க்கெட்டை, வளையப்பேட்டை புறவழிச்சாலைப் பகுதியில் அமைக்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT