Published : 20 May 2014 05:01 PM
Last Updated : 20 May 2014 05:01 PM

மதிமுக மாநகர செயலர் மலர்மன்னன் உடல் நலக்குறைவால் மரணம்

மதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலராக நீண்ட நாட்களாக பதவி வகித்து வந்த மலர்மன்னன் உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

திருச்சிக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்ட, 77 வயதான மலர்மன்னனின் உடல் அண்ணாமலை நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு அவரது உடல் வீட்டிலிருந்து ஊர்வலமாக லூர்து மாதா ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரார்த்தனைக்குப் பின் முதலியார் சத்திரத்தில் உள்ள ஆர்.சி. கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

மறைந்த மலர்மன்னன் உடலுக்கு மதிமுக மாநில பொதுச் செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி செலுத்த செவ்வாய்க்கிழமை காலை திருச்சி வருகிறார்.

மரணம் அடைந்த மலர்மன்னன் திருச்சி கிழக்கு தொகுதியில் (அப்போது திருச்சி-1) 1984,1989-ம் ஆண்டுகளில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

அதன் பிறகு 1992-ல் தி.மு.கவிலிருந்து வைகோ பிரிந்து வந்து மதிமுக-வை தொடங்கியபோது அவருடன் இணைந்து செயல்பட்டார். திருச்சி மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் மற்றும் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தார்.

கட்சி வேறுபாடு பார்க்காமல் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடனும் நட்புடன் பழகியவர். இவருக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.

மலர்மன்னன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x