Published : 11 May 2020 12:24 PM
Last Updated : 11 May 2020 12:24 PM

அன்னவாசல் திட்டத்துக்கு நடிகர் சூர்யா ரூ.5 லட்சம் நன்கொடை: மதுரை எம்.பி. வெங்கடேசன் நன்றி

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் மாமதுரை அன்னவாசல் திட்டத்துக்கு நடிகர் சூர்யா ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

அன்னவாசல் திட்டத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் சூர்யாவுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

மதுரையில் தனித்திருப்பவர்கள், கைவிடப்பட்டவர்கள், கவனிப்பாரற்ற முதியவர்கள் என உணவு சமைத்து சாப்பிட வழியின்றி தவிக்கும் விளிம்பு நிலை மக்களுக்கு மதிய உணவினை அவர்களின் இருப்பிடம் சென்று தருகின்ற முயற்சியினை கடந்த மே 1 ஆம் தேதி ”மாமதுரையின் அன்னவாசல்” என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இத்திட்டத்திற்கு நடிகர் சூர்யா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள நன்றி அறிக்கையில், "மாமதுரையின் அன்னவாசல் திட்டம் மே:1 ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஆதரவு தேவைப்படும் விளிம்புநிலை மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மதியவுணவு வழங்கும் இத்திட்டமானது, 3000 பேருக்கு உணவு வழங்கித் தொடங்கப்பட்டது.

இன்றைய நிலையில் நாள்தோறும் 4500 பேருக்கு முட்டையுடன் மதியவுணவு வழங்கப்படுகிறது. 400-க்கும் மேற்பட்ட தன்னார்வளர்கள் உணர்வுப்பூர்வமாக இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

"ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்" என்பது வள்ளுவன் மொழி. 'அகரம்' மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா. இப்போது 'ஆகாரம்' மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன்வந்துள்ளார்.

நல்ல முன்னெடுப்புக்கள் பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நகரும். அப்படியான நகர்வில், தன் பங்களிப்பாக 5 லட்ச ரூபாயை நன்கொடையாக அன்னவாசலில் சோறூட்ட அளித்து மகிழ்ந்திருக்கின்றார் திரைக்கலைஞர் சூர்யா.

அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x