Published : 11 May 2020 11:56 AM
Last Updated : 11 May 2020 11:56 AM
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உயிரோடு எரிக்கப்பட்ட சிறுமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை எரித்துக்கொன்ற அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய் நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவர் வீட்டின் அருகே சிறிய அளவில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் முருகன் (51) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
ஏற்கெனவே ஒரு பிரச்சினையில் ஜெயபாலின் தம்பியை முருகன் வெட்டியதாக வழக்கு உள்ளது. இதில் போலீஸில் ஜெயபால் புகார் அளித்ததால் அவர் மீது முருகன் கடும் கோபத்துடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ஜெயபாலின் கடைக்கு வந்த முருகன், பெட்டிக்கடையில் வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டிருந்த ஜெயபாலின் மகனைத் தாக்கியுள்ளார். இதில் கடுமையாகக் காயமடைந்த ஜெயபாலின் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க ஜெயபால் சென்றிருந்தார். அவரது மனைவியும் வெளியில் சென்றிருந்த நிலையில் கடையில் ஜெயபாலின் மகள் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த முருகனும், அவரது கூட்டாளி யாசகம் என்கிற கலியபெருமாள் (60) இருவரும் அப்பா எங்கே என்று கேட்டுத் தகராறு செய்துள்ளனர். பின்னர் மாணவியை அவரது வீட்டுக்கு இழுத்துச் சென்று அவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துவிட்டு ஓடிவிட்டனர்.
இந்த நிலையில் அவளது வீட்டில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறியதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் இருந்த மாணவியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அவரிடம் விசாரணை நடத்திய விழுப்புரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் அருண்குமாரிடம் மாணவி வாக்குமூலம் அளித்தார். அதில், கடையில் தனியாக இருந்த தன்னை அங்குவந்த முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும் தாக்கி வீட்டுக்குள் இழுத்துச் சென்றனர். பின்னர், தனது கைகளைக் கட்டி, வாயில் துணியை அடைத்து, தலையில் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர் என்று கூறினார். மாணவி மரண வாக்குமூலம் அளித்ததின் அடிப்படையில் அதிமுக முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் முருகனும், கலியபெருமாளும் கைது செய்யப்பட்டனர்.
மாணவி மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 80 சதவீத தீக்காயத்துடன் உயிருக்குப் போராடி வந்த மாணவி சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
தந்தையின் மேல் உள்ள பகையால் அவரது மகனைத் தாக்கியதும், அப்படியும் கோபம் அடங்காமல் மகளைக் கொடூரமாகத் தீவைத்துக் கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT