Published : 11 May 2020 07:10 AM
Last Updated : 11 May 2020 07:10 AM

50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்கினால் ஒரு கி.மீ.க்கு ரூ.15 இழப்பு ஏற்படும் என மதிப்பீடு- சாலை வரி விலக்கு அளிக்க அரசுக்கு வலியுறுத்தல்

சென்னை

கரோனா ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டால் போக்குவரத்து கழகங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கான இழப்பு ரூ.15 ஆக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அடுத்த 6 மாதங்களுக்கு சாலை வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தினமும் 1.87 கோடி பேர் பயணம் செய்துவந்தனர். இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு 320-க்கும் மேற்பட்ட போக்குவரத்து பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அரசு பேருந்துகள் ஓடாததால், போக்குவரத்து துறைக்கு இது வரை இல்லாத அளவுக்கு ரூ.1,150 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு முடிந்த வுடன் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

இழப்பு உயரக்கூடும்

அரசு பேருந்துகளில் ஒரு கி.மீ-க்கு ரூ.43 வசூலானால் மட்டுமே வருவாய், செலவு சரி சமமாக இருக்கும். கரோனாவுக்கு முந்தைய நிலவரப்படி ஒரு கி.மீ.க்கு ரூ.33 தான் வசூலானது. இதற்கிடையே, பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி ஊரடங்கு முடிந்த பிறகு பேருந்துகளை இயக்க தயாராக வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மேலும் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது, அரசுபேருந்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கான இழப்பு ரூ.10-ல் இருந்து ரூ.15 ஆக உயரும் நிலை ஏற்படும் என மதிப்பீடு செய்துள்ளோம்.

எனவே, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு சாலை வரியில் விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகஅரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதேபோல், பொது போக்குவரத்து வசதியைப் பாதுகாத்திடும் வகையில் சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து பேருந்துகளுக்கு மத்திய அரசு சலுகை அறிவிக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x