Published : 10 May 2020 03:59 PM
Last Updated : 10 May 2020 03:59 PM
மின்சார திருத்தச் சட்டம், கூட்டாட்சி கோட்பாடுகளுக்கும் மக்கள் நலனுக்கும் எதிரானது என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மே 10) வெளியிட்ட அறிக்கையில், "மின்சார திருத்தச் சட்டம் 2020 நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் வரைவு சட்டத்தை ஏப்ரல் 17, 2020 வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாநில உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாவே இப்போது மின்சார திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற துடிக்கிறது.
நாடு முழுவதும் கோவிட்-19 நோய் பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வரும் போது பாஜக மத்திய அரசு மின்சார திருத்தச் சட்டத்தின் மீது கருத்துக் கேட்டிருப்பது அறிவுக்குப் பொருந்தாச் செயலாகும்.
மத்திய அரசின் மின்சார திருத்தச் சட்டம், தற்போது மாநிலங்களில் செயல்பட்டு வரும் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களை நிலைகுலைத் அழிக்கும் நோக்கம் கொண்டது.
மின்சார விற்பனையை தனியாரின் லாப வேட்டைக்குக் கொடுத்து, நுகர்வோர் நலனை பலியிடுகிறது.
தமிழ்நாட்டில் விவசாயத்திற்கும், எளிய மக்களின் வீடுகளுக்கும் வழங்கி வரும் இலவச மின்சாரம் அடியோடு பறிபோகும். கைத்தறி, விசைத்தறி மற்றும் சிறு தொழில்களுக்கும் மாநில அரசால் வழங்கப்படும் சலுகைகள் முற்றாகத் தடுக்கப்படும்.
முந்தைய காலத்தில் தனியார் வசம் இருந்த மின் உற்பத்தி, விநியோகம் சமூக நலனுக்கு உதவவில்லை, அரசுடமை ஆக்கப்பட்ட பின்னர்தான் கிரமாப் பகுதிகளுக்கு மின் இணைப்புக் கிடைத்தது. மீண்டும் மின்சாரம் தனியாரிடம் செல்வதை அனுமதிக்க முடியாது .
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள் மீது வரிகளை விதித்தும், உயர்த்தியும் மக்களைக் கசக்கி பிழிந்து வருவாய் தேடி வரும் மத்திய அரசு, அடுத்த ஆயுதமாக மின்சார திருத்தச் சட்டத்தை கையில் எடுத்துள்ளது.
கூட்டாட்சி கோட்டுபாடுகளுக்கும் மக்கள் நலனுக்கு எதிரானதுமான மின்சார திருத்தச் சட்டத்தை எதிர்த்து எதிர்கட்சிகள் வலிமையாகக் குரல் கொடுத்தைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
இதில் மின்சார திருத்தச் சட்டத்தை விவாதிக்க இது பொருத்தமான நேரம் அல்ல என்று மட்டும் கூறியிருப்து ஏற்கத்தக்கது அல்ல. மத்திய அரசு மின்சார திருத்தச் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என வெளிப்படையாக தமிழ்நாடு அரசு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்" என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT