Published : 10 May 2020 02:10 PM
Last Updated : 10 May 2020 02:10 PM
கரோனா காலம் பலரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளது. நினைத்து ரசித்த விஷயங்கள் கால ஓட்டத்தில் புதைந்து போயிருந்தாலும், இக்காலத்தில் அவை மீண்டும் வெளிப்படும் இயல்பை பலரும் உணர தவறியதில்லை. கரோனா ஊரடங்கில் ஓவியராக தன்னை புதுப்பித்துக் கொள்கிறார் ஓர் முன்னாள் அமைச்சர்.
புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. தமிழகம் அருகே புதுச்சேரி, காரைக்காலும், ஆந்திரம் அருகே ஏனாமும், கேரளம் அருகே மாஹே பிராந்தியமும் உள்ளன. மலையாளக் கரையரோமுள்ள மாஹே பிராந்தியத்தைச் சேர்ந்தவர் வல்சராஜ். காங்கிரஸை சேர்ந்த இவர் முன்னாள் அமைச்சர். ஊரடங்கு காலத்தில் தற்போது புதுச்சேரியில் இருக்கிறார். அரசியலுக்கு வரும் முன்பே இவர் ஓவியர். கரோனா காலத்தில் தனது இளமை காலத்து விருப்பமான ஓவியத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
இதுதொடர்பாக வல்சராஜ் கூறியதாவது:
"கேரள மாநிலம் தலைச்சேரியில் உள்ள கலைக்கல்லூரியில் படிக்கும்போதே ஓவியராகத்தான் இருந்தேன். ஓவியம் மிகவும் பிடிக்கும். அதன்பிறகு இளைஞர் காங்கிரஸில் இணைந்து முழு நேர அரசியல்வாதியானேன். எம்எல்ஏவாகவும், சுகாதார அமைச்சராகவும் பல பொறுப்புகளை வகித்தேன். கடும் பணிக்கு நடுவேயும் என்னை ஆசுவாசப்படுத்துவது ஓவியமே.
கடந்த 2010-ல் ஜனாதிபதி மாளிகையில் எனது ஓவியங்களின் கண்காட்சி இடம்பெற்றது. அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பங்கேற்று திறந்து வைத்தார். அப்போது அங்கு பார்வைக்கு வைத்திருந்த பல ஓவியங்களை பல தலைவர்கள் பார்த்து கவர்ந்ததாக தெரிவித்திருந்தனர். பல பணிகளால் அவ்வப்போதுதான் பிடித்தமான ஓவியம் வரைய முடியும்.
புதுச்சேரியில் கடந்த மாதம் இருந்தபோது ஊரடங்கு அமலானது. புதுச்சேரியில் இருந்ததால், சொந்த ஊரான மாஹேவுக்குச் செல்ல முடியவில்லை. தனிமனித இடைவெளியால் யாரையும் சந்திக்கவில்லை. நண்பர்கள் பரிந்துரையால் படிக்கத் தவறிய புத்தகங்கள், பார்க்க தவறிய திரைப்படங்களை பார்க்கத் தொடங்கினேன். ஆனால் சலிப்பு ஏற்பட்டது.
என்னுள் உறைந்திருந்த ஓவியம் வெளிவர தொடங்கியது. புதுச்சேரி என் மனதில் பதிந்ததால் இங்குள்ள முக்கிய சிறப்பான வீதிகள் என்னுள் உறைந்துள்ளது. அதை வரைய முற்பட்டேன். ஆனால், எனது ஓவியத்துக்கான சாதனங்கள் மாஹே வீட்டில் இருந்தது.
ஓவிய நண்பர்களிடம் இருந்து இங்கு தூரிகைகள், வண்ணக்கலவைகள், சாதாரண பேப்பர்கள் என கிடைத்ததை வைத்து வரைய தொடங்கினேன். நேராக கடற்கரையை சென்றடையும் புதுச்சேரி தெருக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. அதை வரைய தொடங்கினேன். இந்த ஓவியங்கள் அனைத்தும் ஊரடங்கின் நினைவாய் என் வாழ்வில் இடம்பெறும்" என்கிறார், வரைந்தபடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT