Published : 10 May 2020 01:11 PM
Last Updated : 10 May 2020 01:11 PM
கரோனா நோயாளிகள் குணமடைந்துவிட்டார்களா என பரிசோதிக்காமலேயே வீட்டுக்கு அனுப்பலாம் என்ற மத்திய சுகாதாரத்துறையின் புதிய வழிகாட்டுதலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தொல்.திருமாவளவன் இன்று (மே 10) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் அதிக காய்ச்சலோ, மூச்சு விடுவதில் சிரமமோ இல்லையென்றால், அவர்களை 10 நாட்கள் முடிந்ததும் குணமடைந்துவிட்டார்களா என்று சோதனை செய்யாமலேயே வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என மத்திய சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
அவர்கள் வீட்டுக்குச் சென்ற பின் 5 நாட்கள் தனித்திருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. குணமடைந்ததை உறுதி செய்யாமல் அவர்களை வீட்டுக்கு அனுப்புவது நோய் பரவுவதற்கே வழிவகுக்கும். இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படும். மத்திய அரசின் முடிவை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழக அரசு இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றக் கூடாது என வலியுறுத்துகிறோம்.
கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவின் நோயாளிகள் எண்ணிக்கை இன்னும் சில நாட்களில் ஒரு லட்சத்தைத் தாண்டிவிடும் எனத் தெரிகிறது. நோயாளிகள் அதிகரிப்பதற்கேற்ப அவர்களைத் தங்க வைப்பதற்குப் போதுமான படுக்கை வசதி மருத்துவமனைகளில் இதுவரை உருவாக்கப்படவில்லை.
அவர்களை சோதிப்பதற்குப் போதுமான ஆர்டி பிசிஆர் கருவிகளும் மத்திய அரசின் கையிருப்பில் இல்லை எனத் தெரிகிறது. அதனால்தான் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது எனக் கூறப்படுகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த இத்தனை நாட்களையும் உருப்படியாகப் பயன்படுத்தாமல் வீணடித்துவிட்டு இப்போது மக்களின் உயிரோடு விளையாட நினைக்கிறது மோடி அரசு.
தெலங்கானாவில் ஊரடங்கு மே மாதம் 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மத்திய அரசோ தொழிலதிபர்களுக்கு வசதி செய்து தரும் விதமாக ஊரடங்கைத் தளர்த்துவதற்கு மே 17 வரையிலும்கூட காத்திராமல் அவசர அவசரமாகப் பல அறிவிப்புகளைச் செய்து வருகிறது.
மத்திய அரசுக்கு மக்களின் உயிர் மீது கொஞ்சமும் அக்கறையில்லை என்பதையே இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. இந்திய மக்களை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கும் இந்த வழிகாட்டுதலை உடனே திரும்பப்பெற வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதலை ஏற்றால் தமிழ்நாட்டில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துவிடும். எனவே அதை ஏற்கக்கூடாது எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்" என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT