Published : 10 May 2020 01:08 PM
Last Updated : 10 May 2020 01:08 PM
கொடிய கரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (மே 10) வெளியிட்ட அறிக்கையில், "காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, மக்களிடம் வறுமையை போக்குவதற்காக தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013 இல் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்தின்படி 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அன்று இருந்த 122 கோடி மக்களில் 67 சதவீத மக்களுக்கு அதாவது 81 கோடி மக்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ஒன்றுக்கு 1 கிலோ அரிசி ரூ.3, கோதுமை ரூ.2, பருப்பு ரூ.1 என்கிற அளவில் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ தானியங்கள் வழங்குவது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் 25 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும். இதற்கு தேவைப்படும் உணவு தானியங்களின் அளவு 7 கோடி டன் ஆகும். இதற்காக அன்றைய மத்திய அரசு வழங்கிய மானியம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 247 கோடி ரூபாய்.
இந்த வறுமை ஒழிப்புத் திட்டத்தை 2014 இல் ஆட்சிக்கு வந்த பாஜக செயல்படுத்துவதில் மிகுந்த அக்கறை காட்டவில்லை. இந்த திட்டத்தின்படி தானியங்களுக்கு பதிலாக நேரடி பயன் மாற்றத்தின் மூலம் பணமாக வழங்குவதற்கு முயற்சி செய்தது.
ஆனால், இதற்கு எதிர்ப்பு எழுந்த காரணத்தால் ஆதார் அட்டையை அடிப்படையாக வைத்து 2017 முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் கரோனா தொற்று காரணமாக கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிற சமயத்தில் பொது விநியோகத்துறை மூலம் உணவு தானியங்கள் விரைவாக வழங்கப்பட வேண்டும். ஆனால், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி மொத்த பயனாளிகளான 80.3 கோடி மக்களில் 60.3 கோடி மக்களுக்கு தான் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்று நோய் காரணமாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், நாடு முழுவதும் விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட 12 மில்லியன் டன் உணவு தானியங்களில் 6.8 மில்லியன் டன் தான் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன.
பொது விநியோகத்துறை மூலம் உணவு தானியங்கள் காலதாமதத்தோடு வழங்கப்படுவதால் வறுமையில் சிக்கியிருக்கிற ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உணவு தானியங்கள் அனைத்து மக்களுக்கும் விரைவாக சென்றடைவதற்கு மத்திய உணவு அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும்.
இந்நிலையில், 2020 இல் மக்கள்தொகை 137 கோடி ஆக உயர்ந்த பிறகு அதில் 67 சதவீதமான 92 கோடி மக்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி உணவு தானியங்களை மத்திய பாஜக அரசு வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால், இதில் விடுபட்ட ஏறத்தாழ 10 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 3 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு குடும்ப அட்டைகள் இல்லாதது தான் உணவு தானியங்கள் வழங்கப்படாமல் இருப்பதற்கு காரணம் என்று மத்திய அரசு கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
கொடிய கரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். மேலும், இந்திய உணவு கழகத்தில் தற்போது 77 மில்லியன் டன் உணவு தானியங்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன.
எனவே, இந்த மக்கள்தொகை அதிகரிப்பை கணக்கில் கொண்டு கையிருப்பில் உள்ள தானியங்களை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய பாஜக அரசை கேட்டுக்கொள்கிறேன். இதை உடனடியாக செய்யவில்லையெனில் வறுமையை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு உணவு வழங்கி உயிரை காப்பாற்ற முன்வராத அரசை, மக்கள் விரோத அரசாகவே கருத வேண்டியிருக்கும்" என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT