Published : 10 May 2020 12:32 PM
Last Updated : 10 May 2020 12:32 PM
காரைக்காலில் முதல் முறையாக குற்றவாளி ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாருக்கும் கரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனை நடக்க உள்ளது.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டு புதுச்சேரியில் 3 பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இதர பிராந்தியங்கான காரைக்கால், மாஹே, ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லாமல் அப்பகுதிகள் இருந்தன. இந்நிலையில் முதல் முறையாக காரைக்கால் பகுதியில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் கேட்டதற்கு, "புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலில் முதல் முறையாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காரைக்கால், சுரக்குடி பகுதியைச் சேர்ந்த அவர் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு கைதானவர். அவர் சிறைக்கு செல்லும் பரிசோதனைக்கு போலீஸார் அழைத்து சென்றனர். அப்போது கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவரை கைது செய்த போலீஸார், அவருடன் தொடர்பில் இருந்தோருக்கும் பரிசோதனை நடக்க உள்ளது.
புதுச்சேரியில் மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், கடைகளில் காத்திருக்கும் போது வெயிலில் இருந்து தங்களை பாதுக்காத்துக்கொள்ள பொதுமக்கள் குடைகளை பயன்படுத்துவதும் அவசியம்" என்று தெரிவித்தார்.
ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து இதுவரை பச்சை மண்டலமாக இருந்த காரைக்கால் மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT