Published : 10 May 2020 11:13 AM
Last Updated : 10 May 2020 11:13 AM
அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் என, ரஜினிகாந்த் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வரும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில், நோய்த்தடுப்புப் பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் நிபந்தனைகளுடன் அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் கடந்த 7-ம் தேதி திறக்கப்பட்டன.
மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து பெண்களும் பொதுமக்களும் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காமல் மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கிச் செல்வது கரோனா நோய்ப்பரவலை அதிகரிக்கும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், மதுக்கடைகளை உடனே மூட வேண்டும் என, திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.
இதையடுத்து, டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மதுக்கடைகளை மூடவும், ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்பனை செய்யவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு தொடர்ந்தது. இதற்கு தமிழக அரசு மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், மதுக்கடைகளை திறக்க முயற்சிக்கும் தமிழக அரசை நடிகர் ரஜினிகாந்த் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக, ரஜினிகாந்த் இன்று (மே 10) தன் ட்விட்டர் பக்கத்தில், "இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்" என பதிவிட்டுள்ளார்.
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
— Rajinikanth (@rajinikanth) May 10, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT