Published : 10 May 2020 12:33 PM
Last Updated : 10 May 2020 12:33 PM
கரூர் மாவட்டம் கொரவப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் சொந்தச் செலவில் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
கரோனா தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு அமலில் உள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்த கரூர் மாவட்டம் தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றியம் கொரவப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பள்ளித் தலைமை ஆசிரியர் அங்கயற்கண்ணி, இடைநிலை ஆசிரியை எம்.முத்துலட்சுமி ஆகியோர் தலா ரூ.5,000 என ரூ.10,000 மதிப்பில் அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள், பிஸ்கட், முகக்கவசங்கள் ஆகியவற்றை வழங்கினர்.
கொரவப்பட்டி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்திலும், அம்மையப்பன்கவுண்டன்புதூர், வால்காட்டுப்புதூர், பத்தாம்பட்டி ஆகிய பகுதிகளில் மாணவ, மாணவகளின் வீடுகளுக்கு நேற்று (மே 9) நேரில் சென்று 20 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை தலைமை ஆசிரியர் அங்கயற்கண்ணி, ஆசிரியை எம்.முத்துலட்சுமி ஆகியோர் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து வழங்கினர்.
மாணவ, மாணவிகளின் பெற்றோரும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியுடன் நிவாரணப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT