Published : 10 May 2020 07:16 AM
Last Updated : 10 May 2020 07:16 AM
மாநில அரசுகளின் அனுமதியோடு செல்லும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களுக்காக இதுவரை யில் இயக்கப்பட்ட 255 சிறப்பு ரயில்களில் சுமார் 2.65 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். மேலும் தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கரோனா தொற்று இல்லாத வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா வந்த பக்தர்கள் ஆகியோரை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, அந்தந்த மாநில அரசுகளிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, வெளிமாநிலங்களை சேர்ந்த வர்களை சொந்த ஊர்களுக்கு ரயில்கள், பேருந்துகள் மூலம் அனுப்பி வருகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள் கூறும்போது, “தமிழகத்தில் இருக்கும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் அரசு போக்குவரத்து வசதி மூலம் சொந்த மாநிலங்களுக்கு செல்ல https://rtos.nonresidenttamil.org/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். சம்பந்தப்பட்ட மாநில அரசு அதிகாரிகளுடன் பேசி பிறகு அனுமதி வழங்கி வருகிறோம். அந்த வகையில், இதுவரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு இடங்களில் இருந்து பேருந்துகள் மூலம் காட்பாடிக்கு கொண்டு செல்லப்பட்டு, அதன்பிறகு, ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
குஜராத், பிஹார், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு செல்ல இதுவரையில் 2000-க்கும் மேற்பட்ட விருப்பம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் பேசி அனுமதி வழங்கவுள்ளோம்.’’ என்றனர்.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மும்பை, டெல்லி போன்ற பெரிய நகரங்களில் இருந்து அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் புறப்பட்டு செல்கின்றனர். அதன்படி, இதுவரையில் இயக்கப்பட்ட 255 சிறப்பு ரயில்களில் 2.65 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். மேலும் பல்வேறு வழித்தடங்களில் தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில்களை இயக்கவுள்ளோம். ரயில்களில் புறப்படும்போதும், இறங்கும்போதும் அனைவருக்கும் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ’’என்றனர்.
சென்ட்ரலில் காத்திருப்பு
இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வேலை பார்த்துவந்த 200-க்கும் மேற்பட்டோர் சொந்த ஊருக்கு செல்ல கடந்த 2 நாட்களாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறதா? என்பதை அறிந்துகொள்வதற்காக அவர்கள் நேற்றும் காத்திருந்தனர். ரயில் கட்டணத்தை தரவும் தாங்கள் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “ரயில் நிலையத்துக்கு தினமும் வரும் வெளிமாநில தொழிலாளர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை அழைத்து வந்த ஒப்பந்ததாரர்களும் இவர்களுக்கு சரியான முறையில் வழிகாட்டி, மாநில அரசின் அனுமதியை பெற்றுத் தராமல் இருக்கின்றனர்.’’என்றனர்.
கோவையில் இருந்து 3,420 பேர்
உத்தரப்பிரதேசம் மாநிலம் தன்பூர், ஜான்பூர் ஆகிய இடங்களுக்கு 2 ரயில்களும், பிஹார் மாநிலம் தானாப்பூருக்கு ஒரு ரயிலும் கோவை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இயக்கப்பட்டன. ஒரு ரயிலுக்கு தலா 1,140 பேர் வீதம் மொத்தம் 3,420 தொழிலாளர்கள் அழைத்து செல்லப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒடிசாவுக்குக்கு சிறப்பு ரயில்
சென்னை சென்ட்ரலில் இருந்து ஒடிசா மாநிலத்துக்கு நேற்று இரவு 8 மணிக்கு 24 பெட்டிகளுடன் சிறப்பு ரயில் சென்றது. இதில், பயணித்த 1200-க்கும் மேற்பட்டோருக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்பட்டன. இந்த ரயில் வரும் 11-ம் தேதி காலை பூரி ரயில் நிலையத்தை அடையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT