Published : 09 May 2020 06:38 PM
Last Updated : 09 May 2020 06:38 PM

தமிழகப் பொருளாதாரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டப் பொருளாதார மேம்பாட்டுக் குழுவின் பணிகள் என்ன? யார் இந்த சி.ரங்கராஜன்?

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் : கோப்புப்படம்

சென்னை

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் தமிழகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பைச் சீரமைக்க 24 பேர் கொண்ட பொருளாதார வல்லுநர்கள், பல்துறை நிபுணர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

24 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவுக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவரான சி.ரங்கராஜனை தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவி்ட்டுள்ளது.

இந்தக் குழுவில் பல்துறை வல்லுநர்கள், பொருளாதார நிபுணர்கள் என 14 பேரும், மாநில அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆய்வு செய்து அடுத்த 3 மாதங்களில் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்வார்கள்.

இந்தப் பொருளாதார உயர்மட்டக் குழுவின் பணிகள் என்ன?

  • கரோனா வைரஸ் பெருந்தொற்றால் தமிழகப் பொருளாதாரத்தில் உள்ள பல்வேறு துறைகளில் உடனடியாக மற்றும் நடுத்தர காலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்தல்.
  • லாக்டவுன் கொண்டுவரப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பு, மற்றும் கூடுதல் செலவினங்கள் முன்தடுப்பு நடவடிக்கைகள், சமூக விலகலைக் கடைப்பிடித்தலால் ஏற்பட்ட தாக்கங்களையும் ஆய்வு செய்தல்.
  • தமிழகப் பொருளாதாரத்தை மேம்படுத்த குறுகிய காலத்திலும், நடுத்தர காலத்திலும் இருக்கும் வாய்ப்புகள், அச்சுறுத்தல்களை ஆய்வறிந்து கூறுதல்.
  • தமிழகப் பொருளதார வளர்ச்சிக்கான முக்கியமான துறைகளை கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தேவையான உதவிகளைக் கண்டறிதல்.
  • தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாகக் கருதப்படும் துறைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ஆதரவு அளிக்கவும் தமிழக அரசு சார்பில் சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டயதையும் அறிவுறுத்துதல்.
  • கரோனா வைரஸால் தமிழக அரசின் நிதிச்சூழலில் ஏற்பட்ட பாதிப்பு, நிதிச்சூழலை மேம்படுத்தும் வழிகள் கண்டறிதல். குறிப்பாக வரி விதிப்பை உயர்த்துதல், உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம், முன்னுரிமை அளித்துச் செலவழித்தல், வருவாயைப் பெருக்குதல் போன்றவற்றை ஆய்வு செய்தல்.
  • தமிழக அரசுக்கு இருக்கு நிதிப் பிரச்சினைகள், பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு எடுக்க வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகளை ஆராய்தல்.
  • கட்டுமானத்துறை, சிறு தொழில்கள், சிறு வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் நிதி, நிதியுதவி அளித்தலைக் கண்டறிதல்.

இந்தப் பணிகளை பொருளாதார உயர்மட்டக் குழு செய்ய உள்ளது.

யார் இந்த சி.ரங்கராஜன் ?

தமிழகத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி ரங்கராஜன் திருச்சியில் உள்ள தேசியக்கல்லூரியிலும், சென்னையில் உள்ள லயோலா கல்லூரியிலும் பட்டம் பெற்றவர். 1964-ம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அதுமட்டுமல்லாமல் பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அகமதாபாத் ஐஐஎம்ஏ உயர் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகவும் ரங்கராஜன் இருந்துள்ளார்.

அதன்பின் கடந்த 1982 முதல் 1991-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த சி.ரங்கராஜன், 1992 முதல் 1997-ம் ஆண்டு வரை ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்தார்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 1997-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை ஆந்திர மாநிலத்தின் ஆளுநராகவும் சி.ரங்கராஜன் பதவி வகித்துள்ளார். ஆந்திராவின் ஆளுநராக இருந்த காலத்தில் 1998 முதல் 1999 வரை ஒடிசாவின் ஆளுநராகவும், 2001 முதல் 2002-ம் ஆண்டு வரை தமிழகத்தின் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பையும் வகித்துள்ளார்.

அதன்பிறகு நாட்டின் 12-வது நிதிக்குழுவின் தலைவராக சி.ரங்கராஜன் நியமிக்கப்பட்டார். அதன்பின் 2005 முதல் 2008-ம் ஆண்டு பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழுவின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். இந்தப் பதவிக்காலம் முடிந்ததும் மாநிலங்களவை எம்.பி.யாகவும், பின்னர் 2009-ம் ஆண்டு மீண்டும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழுவின் தலைவராகவும் ரங்கராஜன் நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முடிந்ததும் தனது பதவியை ரங்கராஜன் ராஜினாமா செய்தார்.

இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் முன்னாள் தலைவராகவும், ஹைதராபாத் பல்கலைக்கழக்தின் முன்னாள்துணை வேந்தராகவும், சிஆர் ராவ் கல்வி நிறுவனத்தின் நிறுவனத் தலைவராகவும் ரங்கராஜன் பொறுப்பு வகித்தவர்.

இந்திய அரசின் 2-வது உயர்ந்த விருதான பத்மவிபூஷண் விருது பெற்ற ரங்கராஜன் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸின் தலைவராக உள்ளார்.

இந்தியாவின் வறுமைக்கோடு குறித்த கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரங்கராஜன் தலைமையில் அளிக்கப்ப்ட அறிக்கை பரபரப்பாகப் பேசப்பட்டது. நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களைக் கணக்கிடும் முறையை ரங்கராஜன் குழு மாற்றி அமைத்தது. அதுமட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் நாள்ஒன்றுக்கு ஒருநபர் ரூ.37 நகர்புறங்களில் ரூ.47 ெசலவு செய்பவர் வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பவர் என்று மறுமதிப்பீடு செய்தது. அதற்குமுன் இருந்த டெண்டுல்கர் கமிட்டி கிராமபுறங்களில் 27 ரூபாயும், நகர்ப்புறங்களில்33 ரூபாய் என்ற அளவீடு வைத்திருந்தது

கடந்த 1991-ம்ஆண்டு முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்த்திருத்தங்களை உருவாக்கியகுழுவில் முக்கிய உறுப்பினராக ரங்கராஜன் இருந்தார். அதுமட்டுமல்லாமல் மன்மோகன் சிங் பிரதமராக வந்தபின் அவருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் ரங்கராஜன் நியமிக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x