Published : 09 May 2020 05:39 PM
Last Updated : 09 May 2020 05:39 PM
மதுரை சென்ட்ரல் மார்க்கெட் மாட்டுத்தாவணி பகுதிக்கு இடம்பெயர்ந்த பிறகு, மொத்த வியாபாரத்துக்கான கடைகளில் பெரும்பாலானவை பரவை மார்க்கெட்டுக்கு இடம்பெயர்ந்தன. அங்கே மொத்தம் 450 கடைகள் இருப்பதால், மதுரையின் மிகப்பெரிய மொத்த காய்கனி விற்பனை மார்க்கெட் எனும் பெயர் பரவை மார்க்கெட்டுக்கு கிடைத்தது. தற்போது கரோனா எச்சரிக்கையாக மாட்டுத்தாவணி மார்க்கெட்டும் மூடப்பட்டுவிட்டதால், வியாபாரிகளில் பலர் பரவை மார்க்கெட்டுக்குப் படையெடுக்கத் தொடங்கினார்கள்.
கரோனா பரவலுக்கு துணைபுரியும் வகையில் அங்கே நெருக்கடி நிலவுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து மதுரை கலெக்டர் டி.ஜி.வினய் கடந்த 5-ம் தேதி அந்த மார்க்கெட்டை ஆய்வு செய்தார். அப்போது அனுமதியில்லாமல் செயல்பட்ட 2 டீக்கடைகளையும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காத 3 காய்கனி கடைகளையும் அவர் மூடி சீல்வைக்க உத்தரவிட்டார். ஆனாலும் இந்தப் பிரச்சினை தீராததால், மறுநாள் அதிகாலையிலேயே அதிகாரிகள் ஆய்வு செய்து மேலும் 6 காய்கனி கடைகளுக்கு சீல் வைத்தார்கள்.
இப்படியே போனால், மதுரையின் கோயம்பேடாக பரவை மார்க்கெட் மாறிவிடும். சமூகப் பரவல் தீவிரமாகிவிடும் என்று அதிகாரிகள் சொன்னதைத் தொடர்ந்து, அங்குள்ள காய்கனி கடைகளைப் பிரித்து மதுரை பாத்திமா கல்லூரி மைதானத்துக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அது தனியாரால் நிர்வகிக்கப்படும் மைதானம் என்பதால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன்படி தற்போது சில்லறை விற்பனைக் கடைகள் மட்டும் பாத்திமா கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளன.
இங்கு தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும்படி கோடுகள் வரையப்பட்டுள்ளதுடன், மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நாளை முதல் அந்தக் கடைகள் பாத்திமா கல்லூரி மைதானத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஞாயிறு தோறும் மதுரையில் இறைச்சிக் கடைகளில் கூடும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், நாளை (10-ம் தேதி) மதுரையில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும், மீன்கடைகளும் செயல்படாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT