Published : 09 May 2020 03:44 PM
Last Updated : 09 May 2020 03:44 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட 12 இடங்களில் போலீஸார், மற்றும் சுகாதாரத்துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக கரோனா தொற்று ஏற்பட்ட 16 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று குணமடைந்து அனைவரும் வீடு திரும்பியுள்ளனர்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதாரப் பெண் பணியாளர் சென்னையில் பணிக்கு சென்றபோது கரோனா தொற்று ஏற்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் சேர்த்து கரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 17 பேராக உயர்ந்தது.
இந்நிலையில் தற்போது சென்னை உட்பட பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த 8 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியிடங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்தடைந்துள்ளனர். அவர்களை ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் போலீஸார், சுகாதாரப்பணியாளர்கள் சோதனை செய்து வருகின்றனர். இதைப்போல் கேரள எல்லை பகுதியில் உள்ள களியக்காவிளை சோதனை சாவடியிலும் கடும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இவர்களில் சோதனை செய்யப்பட்ட மேலும் 8 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து குமரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 பேராக உயர்ந்துள்ளது.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் மட்டும் 6 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள இருவரில் 5 வயது பெண் குழந்தைக்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியிலும், அறந்தாங்கியை சேர்ந்த கார் ஓட்டுனருக்கு அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் குலசேகரம் செறுதிக்கோணம், நாகர்கோவில் தளவாய்புரம், வெட்டுர்ணிமடம், கேசவதிருப்பபுரம், கல்லுக்கூட்டம், தென்தாமரைகுளத்தில் இரு பகுதிகள், சுங்காங்கடை, விரிகோடு ஆகிய பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைப்போல் ஏற்கனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் வசிக்கும் நாகர்கோவில் டென்னிசன்ரோடு, வௌளடிச்சிவிளை, மணிகட்டிபொட்டல், அனந்தசாமிபுரம், தேங்காய்பட்டணம் தோப்பு ஆகியவையும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக நீடித்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட 12 பகுதிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள், போலீஸார், உள்ளாட்சி துறையினர் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதைப்போல நாகர்கோவில் செம்மாங்குடி ரோடு, அலெக்ஸாண்டர் பிரஸ் ரோடு ஆகியவையும் அதிகமானோர் கூடும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளதால் அப்பகதிகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் வசிக்கும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நாகர்கோவில் தளவாய்புரத்தில் நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதிக மக்கள் நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT