Published : 09 May 2020 02:51 PM
Last Updated : 09 May 2020 02:51 PM
பொது முடக்கம் முடிவுக்கு வந்ததும், பொதுத் தேர்வு எழுதிய, எழுதவிருக்கின்ற மாணவர்களின் விடைத் தாள்களை திருத்தும் பணிகள் தொடங்கவிருக்கின்றன. இந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின்போது தனிமனித விலகலைக் கடைப்பிடிக்கும் விதமாக கூடுதலான எண்ணிக்கையில் விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளி (அரசு உதவிபெறும் பள்ளி) ஆசிரியர் அலுவலர் சங்க மாநிலப் பொருளாளர் நீ.இளங்கோ கோரிக்கை வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் தேர்வுத் துறைக்கு இளங்கோ விடுத்திருக்கும் கோரிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
''ஒரு கல்வி மாவட்டத்துக்கு ஒரு மையம் என்ற அடிப்படையில் அரசுப் பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு மையங்கள் பெரும்பாலும் இப்போது இருந்து வருகின்றன. ஆனால், கரோனா தொற்று அச்சம் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஒரு மாவட்டத்துக்கு ஒன்று என்பது ஏற்புடையதாக இருக்காது. தனி மனித விலகலைக் கடைப்பிடிக்க வேண்டியதைக் கருத்தில் கொண்டு அனைத்துக் கல்வி மாவட்டங்களிலும் கூடுதலாக ஒரு விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தை ஏற்படுத்த வேண்டும்.
விடைத்தாள் மதீப்பிட்டு மையங்களில் முதன்மைத் தேர்வர் (CE), கூர்ந்தாய்வாளர் (SO), உதவித் தேர்வாளர் கொண்ட ஒரு குழுவுக்கு ஒரு அறை என்ற அடிப்படையில் அறைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒரு குழுவில் அதிகமான உதவித் தேர்வாளர்களை நியமனம் செய்யாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சில ஆசிரியர்கள் பணியாற்றுவது ஒரு மாவட்டமாகவும் அவர்கள் இருப்பிடம் ஒரு மாவட்டமாகவும் இருந்தால் அவர்கள் இருப்பிட மாவட்டத்திலேயே விடைத்தாள் மதிப்பீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும். விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் நாள்தோறும் கிருமிநாசினி தெளிப்பான் தெளித்து சுகாதாரம் காக்க வேண்டும்''.
இவ்வாறு இளங்கோ தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT