Last Updated : 03 Aug, 2015 09:14 AM

 

Published : 03 Aug 2015 09:14 AM
Last Updated : 03 Aug 2015 09:14 AM

நவீன இலக்கியங்களை பரதநாட்டியத்தில் பயிற்றுவித்து நாட்டியக் கலைஞர் கலைச்சேவை

இளைய தலைமுறையினரிடம் பரதநாட்டியக் கலையை கொண்டு சேர்க்கும் முயற்சியில், நவீன இலக்கியங்களையும் பரத நாட்டியத்தில் பயிற்றுவித்து வருகிறார் ஷண்முக சுந்தரம்.

நாமக்கல்லில் பிறந்த ஷண்முக சுந்தரத்துக்கு சிறுவயதிலேயே நாட்டியத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. பரதத்தை முறையாக கற்றுத்தர உள்ளூரில் யாரும் இல்லாததால் சென்னைக்கு வந்துள்ளார் ஷண்முக சுந்தரம். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியம் படித்துக்கொண்டே புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் ‘கலைமாமணி’ கே.ஜே.சரஸாவிடம் நாட்டியம் கற்றுள்ளார்.

நாட்டியம் கற்ற பிறகு ‘சதிர்’ என்னும் நாட்டியப் பள்ளியைத் தொடங்கியவர், உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று பரதக் கலையைப் பரப்பி வருகிறார். பாரத கலா ரத்னா, யுவ கலா பாரதி, நடன மணி, நாட்டியச் செல்வம், கலை சுடர்மணி உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். பரத நாட்டியத்துக்கான தனது சேவை குறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

எனக்கு பரதத்தின்மீது ஆர்வம் என்பதைவிட, பரதக் கலைக்கு என் மீது ஆர்வம் என்றே கூறுவேன். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே நடனம் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. சென்னை வந்தபிறகு நடனம் கற்றுக்கொள்ள பலரிடம் சென்றேன். இசை விமர்சகர் சுப்புடு எழுதிய கட்டுரையில் கே.ஜே.சரஸா மாஸ்டர் பற்றி எழுதியிருந்தார். உடனே, சரஸா மாஸ்டரிடம் சென்றேன். முழுக்க பெண்கள் பயிற்சி பெறுகிற இடத்தில், எனக்கு பயிற்சி தர அவர் முதலில் சம்மதிக்கவில்லை.

பிறகு என் தொடர் முயற்சியால் எனக்கு பரதம் கற்றுத்தர சம்மதித்தார்.

பரதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது எனக்கு வயது 20. கலைகளை கற்றுக்கொள்ள வயது ஒரு தடையில்லை என்பதை உணர்ந்தேன். எனக்குள்ளிருந்த ஆர்வத்தால், தயங்காமல் பரதத்தை விரைந்து கற்றேன். தமிழக முதல்வர் ஜெயலலிதா, ரகுராம் மாஸ்டர், எழுத்தாளர் சிவசங்கரி, திரைக்கலைஞர் ஷோபனா போன்ற மிகச் சிறந்த ஆளுமைகளுக்கு பரத நாட்டியத்தைக் கற்றுக் கொடுத்த சரஸா மாஸ்டர் எனக்கும் குரு என்பதில் பெருமையடைகிறேன்.

திரை விழாவில் பரதம்

நமது பாரம்பரியக் கலையான பரதநாட்டியத்தை இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக நவீன இலக்கியத்தையும் பரதத்தில் சொல்லித்தர முடிவெடுத்தேன். உலகப்புகழ் பெற்ற பிரெஞ்சு சிற்பி ரோடின் செதுக்கிய சிற்பங்கள் என்னை ஈர்த்தன. இத்தாலி கவி தாந்தே எழுதிய ‘டிவைண்ட் காமெடி’ காவியத்தின் கதாபாத்திரங்களைத்தான் ரோடின் சிற்பமாக செதுக்கியிருந்தார். அதை பரதநாட்டியமாக்கி ஆடினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2010-ல் மலேசியாவில் நடைபெற்ற பிரெஞ்சு ஆர்ட் அண்ட் ஃபிலிம் திருவிழாவில் எனது பரத நாட்டியமும் இடம்பெற்றது.

பல நாடுகளில் பயிற்சி

ஜீசஸின் வாழ்க்கையை நானே பாடலாக எழுதி 2014-ல் நாட்டியமாடினேன். அதற்கு ஜெர்மனியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் எனது நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அங்குள்ள மாணவர்களுக்கு பரதக் கலை பயிற்சியும் அளித்து வருகிறேன்.

பரதக்கலையின் உட்கூறுகளை உள்வாங்கிக் கொண்டு, இன்றைய இலக்கியங்களோடு இணைத்து செய்யும்போது நிச்சயம் அதனை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க முடியும்.

இப்போது சரஸா மாஸ்டரின் சீடனாக இருந்து அவர் தொடங்கிய ‘சரஸாலயா’ நாட்டியப் பள்ளியை நடத்தி வருகிறேன். வரும் ஆகஸ்ட் மாதம் நியூயார்க் நகரிலுள்ள உலகப் புகழ்பெற்ற ‘பேட்ரி டான்ஸ் கம்பெனி’யின் அழைப்பின் பேரில் எனது நாட்டிய நிகழ்ச்சியை நடத்தவுள்ளேன். இதை பரதக் கலைக்கும் எனக்கும் கிடைத்த பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x