Published : 09 May 2020 12:58 PM
Last Updated : 09 May 2020 12:58 PM
மதுக்கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கடைகள் மூடப்படும் அதிகாரபூர்வ அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நேற்றைய விற்பனையும் அதிக அளவில் இருந்துள்ளது. ரூ.122 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனது.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலானது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களைத் தவிர அனைத்தும் மூடப்பட்டன. இதில் மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் பல பத்தாண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் மதுவிலக்கு போன்றதொரு நிலை 40 நாட்களாக நிலவியது. மது இல்லாமல் வாழவே முடியாது என்று பலரும் கூறிய நிலையில் 44 நாட்கள் வெற்றிகரமாக மது இல்லாத தமிழகமாக இருந்தது.
இந்நிலையில் மே 4-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. அதன் ஒருகட்டமாக மதுக்கடைகளை மே 7-ம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. மதுக்கடைகளைத் திறந்தால் அது சமூக இடைவெளி இல்லாமல் மதுப்பிரியர்கள் முண்டியடித்து மது வாங்கும் நிலையை ஏற்படுத்தும். இதனால் மேலும் கரோனா தொற்று அதிகரிக்கும். ஏற்கெனவே பொதுமுடக்கத்தில் வருமானம் இன்றி வாடும் குடும்பத்தினர் மதுவால் மேலும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் கூறின.
நேற்று முன்தினம் காலை முதல் மதுக்கடை முன் மதுப்பிரியர்கள் முண்டியடித்து சமூக விலகல் இன்றி நின்று மதுவை வாங்கிச் சென்றனர். சென்னையில் தொற்று அதிகமாக இருந்ததால் சென்னை மாவட்டத்தில் மட்டும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் மற்ற மாநிலங்களை விட 3 மடங்கு மது விற்பனை தமிழகத்தில் அதிகரித்தது. நேற்று முன்தினம் தமிழகத்தில் ரூ.172.51 கோடிக்கு மது விற்பனை ஆனது. அதேபோல் நேற்றும் மது விற்பனை நூறு கோடியைக் கடந்தது. நேற்று ஒரு நாளில் மட்டும் 122 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது.
சென்னையில் விற்பனை இல்லாததால் சென்னை மண்டலத்தில் காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் சேர்த்து ரூ.9.28 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.31.17 கோடிக்கும், மதுரை மண்டலத்திக் ரூ.32.45 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.20.01 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ. 29.09 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. இதில் நேற்றும் மதுரை மண்டலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இரண்டு நாளில் சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் மொத்தம் ரூ.294.5 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. சாதாரணமாக ஒரு நாளைக்கு ரூ.75 முதல் ரூ.80 கோடி வரை விற்பனை ஆன நிலையில், பண்டிகைக் காலங்களில் மட்டுமே விற்பனை ரூ.150 கோடியை நெருங்கி வரும்.
இந்நிலையில் தமிழகத்தில் மது விற்பனையில் உயர் நீதிமன்ற நிபந்தனைகளைப் பின்பற்றாததால் இன்று முதல் மதுக்கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மதுக்கடைகள் அனைத்தும் இன்று முதல் மூடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மே 17-ம் தேதி ஊரடங்கு காலம் வரை மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மதுக்கடைகள் மூடப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT