Published : 09 May 2020 11:17 AM
Last Updated : 09 May 2020 11:17 AM

இலவச மின்சாரம் ரத்து; மின் கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் மின்சார சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும்: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

மின்சார சட்டத்தைத் திருத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மே 9) வெளியிட்ட அறிக்கையில், "மின்சாரத் துறையில் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், 2003-ம் ஆண்டின் மின்சார சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. விவசாயிகள் மற்றும் அடித்தட்டு மக்களை கடுமையாகப் பாதிக்கும் இந்தத் திருத்தம் தேவையற்றது; திரும்பப் பெற வேண்டியதாகும்.

மத்திய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள மின்சார சட்டத் திருத்த முன்வரைவு நிறைவேற்றப்பட்டால் அதனால் ஏழைகளும், விவசாயிகளும் தான் மிகக்கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மத்திய மின்சார சட்டத்தின் 45-வது பிரிவு மின்கட்டணத்தை வசூலிக்கும் அதிகாரத்தை மின்சார வாரியங்களுக்கு வழங்குகிறது. இச்சட்டத்தின் 65-வது பிரிவு மின் கட்டணத்திற்கு மாநில அரசுகள் மானியம் வழங்குவதை முறைப்படுத்துகிறது.

இந்த இரு பிரிவுகளிலும் செய்யப்படவுள்ள திருத்தங்களின் மூலம் மாநில அரசுகள் மின்சாரத்திற்கான மானியத்தை மின்சார வாரியங்களுக்கு வழங்குவது தடை செய்யப்படும். மாறாக, பயனாளிகளுக்கு மாநில அரசு விரும்பினால் நேரடியாக மானியம் வழங்க வகை செய்யப்படும்.

விவசாயிகளுக்கு இப்போது நேரடியாக இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. அதற்காக அவர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், குடிசைகள் மற்றும் பசுமை வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம், நெசவாளர் உள்ளிட்ட சில தொழில் பிரிவினருக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ஆகியவை ரத்து செய்யப்படும்.

அவற்றுக்கு சம்பந்தப்பட்டவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இதை மாநில அரசு தடுக்க முடியாது. ஒருவேளை இந்தப் பிரிவினருக்கு உதவ வேண்டும் என்று மாநில அரசு நினைத்தால், மின்சாரத்திற்கான மானியத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.

விவசாயப் பயன்பாட்டுக்கான இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்படும் என்பதாலும், மாநில அரசுகள் மானியம் வழங்க உச்சவரம்புகள் விதிக்கப்படும் என்பதாலும் வேளாண் பணிக்குத் தேவையான மின்சாரம் முழுமையும் இலவசமாக கிடைக்காது. அதுமட்டுமின்றி படிப்படியாக அடுத்த 3 ஆண்டுகளில் இலவச மின்சாரம் முழுமையும் ரத்து செய்யப்படும் ஆபத்து உள்ளது.

அதுமட்டுமின்றி, இப்போது வீடுகளுக்குக் குறைந்த அளவு மின்கட்டணமும், தொழில் மற்றும் வணிகப் பயன்பாடுகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும் முறை கைவிடப்படும். மாறாக, அனைத்து வகை மின் பயன்பாட்டாளர்களுக்கும் ஒரே அளவில் மின்கட்டணம் வசூலிக்கப்படும். அதனால் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் கடுமையாக உயரக்கூடும்.

தமிழ்நாடு முழுமைக்கும் இப்போது தமிழ்நாடு மின்சார வாரியமே நேரடியாக மின்சாரத்தை விநியோகிக்கிறது. புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், மாவட்ட வாரியாக தனியார் நிறுவனங்களை நியமித்து அவர்கள் மூலமாக மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். அதற்கான கட்டணம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும் என செய்திகள் கூறுகின்றன.

மின்வாரியங்களுக்கும், மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையே கொள்முதல் விலை தொடர்பாக ஏதேனும் சர்ச்சைகள் எழுந்தால் அதை மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையம் விசாரித்து தீர்த்து வைக்கும்.

ஆனால், இப்போது இதற்காக மின்சார ஒப்பந்தம் செயலாக்க ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்த மின்சார சட்டத் திருத்தம் வகை செய்கிறது. இது மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமான ஏற்பாடு என்றும், இதனால் ஒரு யூனிட் மின்சாரத்தின் சராசரி விலை இப்போதுள்ள 8 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயரும் என்றும் மின்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி எரிசக்தித் துறை பொதுப்பட்டியலில் உள்ளது. அவ்வாறு இருக்கும்போது மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்களை மத்திய அரசு ஒட்டுமொத்தமாகப் பறித்துக் கொள்வது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.

அதுமட்டுமின்றி, கரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது மின்சார சட்டத் திருத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு துடிப்பதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

இதற்கு முன்பு 2014, 2018, 2019 ஆகிய ஆண்டுகளிலும் இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக முயன்றது. அப்போது பாமக உள்ளிட்ட கட்சிகளும், பொதுமக்களும் கடுமையாக எதிர்த்ததால் இந்த சட்டத்திருத்தம் கைவிடப்பட்டது.

விவசாயிகளையும், அடித்தட்டு மக்களையும் பாதிக்கும் இந்த திருத்தத்தை இப்போதும் பாமக கடுமையாக எதிர்க்கிறது. பொருளாதாரப் பின்னடைவு, கரோனா தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகியுள்ள நிலையில், இச்சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் இலவச மின்சாரம் ரத்து, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட கூடுதல் சுமைகளை திணிக்கக்கூடாது.

எனவே, பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள மின்சார சட்டத்திருத்தத்திற்கான வரைவு மசோதாவை திரும்பப் பெற வேண்டும். மின்சார சட்டத்தைத் திருத்தும் முடிவையே மத்திய அரசு கைவிட வேண்டும். இதை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x