Published : 09 May 2020 07:31 AM
Last Updated : 09 May 2020 07:31 AM
பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக அமைந்து உள்ளதால், மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள 2020-ம் ஆண்டு வரைவு மின்சார சட்டத் திருத்தம் அமலுக்கு வருவதை தடுத்து நிறுத்த முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுப்பார் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 2020 ஆண்டு வரைவு மின்சார சட்டத்திருத்தம் குறித்து மின்துறை அமைச்சர்அமைச்சர் பி.தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு கடந்த மாதம் 17-ம் தேதி 2020-ம் ஆண்டு வரைவு மின்சார சட்டத்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியிட்டு, அனைத்து மாநிலம் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டது. இந்த வரைவு மின்சார சட்டத் திருத்தத்தில் உள்ள பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முக்கிய ஷரத்துக்களை நீக்க மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே, மின்சார வாரியத்தை தனியார்மயமாக்க எடுத்த நடவடிக்கையை கைவிடுமாறு, முதல்வர் 2014 டிசம்பர் 23-ம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக 2018-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட வரைவு மின்சார சட்டத் திருத்தத்தில் கூறப்பட்ட முக்கிய ஷரத்துக்களான நடுத்தர மக்கள் பெறும் மானிய விலை மின்சாரம் மற்றும் விவசாயிகள் பெறும் இலவச மின்சாரத்துக்கான மானியத்தை பயனீட்டாளர்களின் வங்கி கணக்குக்கு அந்தந்த மாநில அரசு நேரடியாக செலுத்துதல் மற்றும் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்த குழுவின் மூலமாக தேர்ந்தெடுத்தல் போன்ற மாநிலத்தின் உரிமைகளை இழக்க நேரிடும். வரைவு திருத்தங்களை கைவிடுமாறு வலியுறுத்தி முதல்வர் கடந்த 2018 நவ.12-ம் தேதி பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதினார்.
தற்போது, மத்திய அரசு 2020-ம் ஆண்டு வரைவு மின்சார சட்டத் திருத்தம் மூலமாக, மேற்கூறிய முக்கிய ஷரத்துக்கள் மட்டுமல்லாது புதிய திருத்தமாக மின்சார விநியோகத்தை மேற்கொள்ள தனியார் துணை விநியோக உரிமதாரர் மற்றும் உரிமம் பெறுபவர் மூலமாக மேற்கொள்ளுதல் மற்றும் மாநில ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட மின்கொள்முதல், மின் விற்பனை செய்யும் மின் உற்பத்தியாளர்கள் மற்றும் உரிமதாரர்களுக்கு இடையேயான ஒப்பந்த சிக்கல்களுக்கு தீர்வு காணுதல் ஆகியவற்றை மத்திய அரசினால் புதிதாக அமைக்கப்பட உள்ள மின் ஒப்பந்த அமலாக்க ஆணையத்துக்கு மாற்றுதல் போன்ற ஷரத்துக்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டு உள்ளது.
மேற்கண்ட அனைத்து வரைவு திருத்தங்களும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக அமைந்து உள்ளதால் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள 2020-ம் ஆண்டு வரைவு மின்சார சட்டத் திருத்தத்தினை கைவிட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இந்த வரைவு மின்சார சட்டத் திருத்தம் அமலாக்கத்துக்கு வராத வகையில், தமிழக முதல்வர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்.
இவ்வாறு தங்கமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT