Published : 09 May 2020 07:24 AM
Last Updated : 09 May 2020 07:24 AM

கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விபரீதம்; புதிதாக தயாரித்த கரைசலை ஆய்வுக்காக உட்கொண்ட பிரபல இருமல் மருந்து நிறுவன மேலாளர் உயிரிழப்பு

சென்னை

சென்னை பெருங்குடி, கல்லூரி இல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன் (47). இவர் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனத் தில் மேலாளராக பணியாற்றி வந்தார். மேலும் மருந்தாளுநராகவும், பல்வேறு புதிய மருந்துகளை கண்டுபிடிப்பதில் வல்லுநராக இருந்ததாகவும் கூறப் படுகிறது.

தற்போது கரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் அதற்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்கும் ஆய்வில் சிவனேசன் ஈடுபட்டு வந்துள்ளார். முதல் கட்டமாக தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள பிரபல டாக்டர் ராஜ்குமார் என்பவரது வீட்டில் உள்ள ஆய்வகத்தில் கரோனா வைரஸுக்கு எதிரான மருந்து தயாரிக்கும் முயற்சி நடந்துள்ளது.

அதன்படி, சோடியம் நைட்ரேட் மூலம் ரத்த அணுக்களின் உற்பத்தியை பெருக்க மாத்திரை கரைசல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை வேறு யாருக்கும் கொடுத்து ஆய்வு மேற்கொண்டால் சட்ட சிக்கல் ஏற்படும் என்பதாலும், எதிர் விளைவு ஏற் பட்டால் அதனால் ஏற்படும் பிரச்சினை களை சமாளிப்பது கடினம் என்பதாலும் புதிதாக தயாரித்த கரைசலை ஆய்வுக்காக சிவனேசன் நேற்று முன்தினம் உட் கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிறிது நேரத்தில் சிவனேசன் மயக்கம் அடைந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பரும், மருத்துவருமான ராஜ்குமார் தரப்பினர், பிற்பகல் 3.30 மணியளவில் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென் றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாலை 4 மணிக்கு சிவனேசன் உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சிவனேசனின் உடலை மீட்டு அதை பிரேத பரி சோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடக்கிறது.

யார் இந்த ராஜ்குமார்?

டாக்டர் ராஜ்குமார் சிறந்த மருத்துவ விஞ்ஞானி மற்றும் தொழிலதிபர். இவர் பிரபல இருமல் நிவாரணி மருந்து நிறு வன உரிமையாளர் எனவும், இவரது நிறு வனத்தில் சிவனேசன் பணி செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. கரோனா தடுப்பு மருந்தாக தயாரிக்கப்பட்ட கரைசலை ராஜ்குமாரும் சிறிது குடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் விசாரித்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x